திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி களத்திற்கு தயாராகும் காளைகள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் உள்ள அவனியாபுரத்தில் தை முதல் நாளான பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.இதனை தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற பாலமேடு , அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு “தை” பொங்கல் திருநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏதுவாக காளைகள் வளர்ப்போர் தங்கள் மாடுகளை பயிற்சி அளித்து வருகின்றனர்.இதற்காக மண்முட்டுதல் பயிற்சி அளிக்கின்றனர். மணல்மேடுகள் குவியலாக வைத்து அதில் மாடுகள் கொம்புகளால் குத்தி பயிற்சி அளிக்கின்றனர்.இதனால் தன்னை பிடிக்க வரும் மாடுபிடி வீரர்களை குத்தி தூக்கி எறிவதற்கு அளிக்கும் பயிற்சியாக உள்ளது.மேலும் நீண்ட நேரம் ஜல்லிக்கட்டு களத்தில் நிற்பதற்காக நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.இதேபோல் நீண்ட நேரம் நடை பயிற்சி உள்ளிட்டவை அளிக்கின்றனர்.இதனால் ஜல்லிக்கட்டு காளைகள் உடல் பலத்துடன் திடகாத்திரமாக ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் களத்தில் நின்று மாடுபிடி வீரர்களை திணறடிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது .ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க பருத்தி விதை, நாட்டுக்கோழி முட்டை ,கம்பு, மக்காச்சோளம் மற்றும் திணை அரிசி உணவு வகைகளாக வழங்குகின்றனர் இதனால் மாடுகளுக்கு நன்றாக தசைபிடிப்பு களுடன் பொலிவான தோற்றத்தில் காணப்படும். தினமும் திடகாத்திரமான ஜல்லிக்கட்டு காளைக்கு ருபாய் 700 முதல் 1000 ரூபாய் வரை செலவு செய்கின்றனர்.போட்டிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் பிடிபடாமல் வென்று பரிசு பெற்றால் ஒரு ஜல்லிக்கட்டு காளைகளை ஒன்றரை லட்சம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்