மதுரை ,சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 399 கண்மாய்கள் 11 பாசன கால்வாய்கள் மற்றும் 1 அணைக்கட்டு புனரமைக்கும் பணி!

பெரியாறு பிரதான கால்வாய் கோட்டம் மேலூர் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 399 கண்மாய்கள் 11 பாசன கால்வாய்கள் மற்றும் 1 அணைக்கட்டு புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதுகுறித்து பெரியாறு வடிநில வட்டம் கண்காணிப்புப் பொறியாளர் எம் சுகுமார்,செய்தியாளர்களிடம் கூறியதாவது:-நீர்வள நிலவள திட்டம் ll,உப்பாறு உப வடிநிலம், தொகுதி 1ன் கீழ் பெரியாறு பிரதான கால்வாய் கோட்டம் மேலூர் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 399 கண்மாய்கள், 11 பாசன கால்வாய்கள், மற்றும் 1 அணைக்கட்டு, புனரமைக்கும் பணிகள் 69.86 கோடி திட்டத்தில் கடந்த 29.2.2020 முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவு பெற உள்ள ஒப்பந்த காலம் 24 மாதங்கள் ஆகும். பெரியாறு பிரதான கால்வாய் 9வது பிரிவு கால்வாய் குன்னத்தூர் பகிர்மான கால்வாயை புனரமைக்கும் பணிகள் மொத்தம் 8.கி.மீ. இதில் இவ்வாண்டு பாசன காலத்திற்கு முன் 2கி.மீ தூரம் பணிகள் நிறைவுபெற்று கடந்த ஆகஸ்ட் மாதம் 31ல் பெரியாறு இருபோக பாசன பகுதிகளுக்கு முதல் போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் செப்டம்பர் மாதம் 1ல், குன்னத்தூர் பகிர்மான கால்வாய்க்கு வந்து சேர்ந்தது. மீதமுள்ள பணிகள் பாசன காலம் முடிவு பெற்றவுடன் தொடங்கப் பெற்று ஒப்பந்த காலத்திற்குள் முடிவு பெறும். மேலும் இந்த கால்வாய் பணியினை விவசாயிகளின் நலன் கருதி மிகுந்த கவனத்துடனும், கால்வாய் கான்கிரீட் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பணிகளை மேற்கொண்டு சிறப்பாக செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரிடம் நாம் கேட்ட போது:- இதற்கு முன் இருந்த இந்த கால்வாய் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையிலும், தண்ணீர் வரும்போது கால்வாய் உடையும் சூழ்நிலையில் இருந்தது. ஆனால் இப்போது இந்த கால்வாய் சிமிண்ட் கான்கிரீட் டினால் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டு மிகவும் சீராகவும்,அழகாகவும் செல்லுவதை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களின் வேண்டுகோளை ஏற்று இந்த கால்வாயை பலப்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கும்,பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.இந்த பேட்டியின் போது பெரியாறு பிரதான கால்வாய் செயற்பொறியாளர் பவளக்கண்ணன், பாசன பிரிவு சிட்டம்பட்டி உதவி பொறியாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..