Home செய்திகள் வாழ்நாள் சாதனையாளருக்கான ‘தயான் சந்த்’ விருது பெருமை தருகிறது – மாற்று திறனாளி பயிற்சியாளர் ரஞ்சித்குமார்

வாழ்நாள் சாதனையாளருக்கான ‘தயான் சந்த்’ விருது பெருமை தருகிறது – மாற்று திறனாளி பயிற்சியாளர் ரஞ்சித்குமார்

by mohan

.விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு  அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரராக இருந்து பல்வேறு பதக்கங்களை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்றதுடன், பயிற்சியாளராகவும் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளி வீரர்களையும் உருவாக்கிய பயிற்சியாளர் மதுரையைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு, மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருதை அறிவித்துள்ளது.இதுகுறித்து  அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலில், ‘மிகக் கடுமையான பாதைகளைக் கடந்து வந்து இந்த சாதனையைப் படைத்திருக்கிறேன் எனும்போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்த மத்திய, மாநில அரசுகளுக்கும், இந்திய பாராலிம்பிக் கமிட்டிக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய தேசத்திற்காக 26 முறை உலகளவில் பங்கேற்று குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறேன். இதுவரை சர்வதேச அளவில் 22 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளேன். அதேபோன்று தேசிய அளவில் 48 தங்கப்பதக்கங்கள் வென்றிருக்கிறேன்.

கடந்த 2014-ஆம் ஆண்டோடு ஓய்வு பெற்றாலும், நான் இதுவரை புரியாத சாதனைகளை என்னுடைய மாணவர்கள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டது எனக்குப் பெருமையாக உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் பயிற்சியாளராக பொறுப்பேற்று எண்ணற்ற வீரர், வீராங்கனைகளை தேசிய, சர்வதேசிய அளவில் உருவாக்கியுள்ளேன்.என்னுடைய கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெகுமானமாக இந்த விருதைக் கருதுகிறேன். என்னுடைய மாணவர்கள், குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் பெருமையளித்துள்ளது. என்னுடைய பயிற்சியாளர் பரசுராம் சார் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்பந்தப் பணியாளராக இருந்தாலும்கூட, இந்தத் துறை என்னை வெகுவாக ஈர்த்துள்ளது. அதற்காகவே குறைந்த ஊதியத்திலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

என்னைப் போன்றே நிறைய மாரியப்பன்கள், ரஞ்சித்குமார்கள் வாய்ப்பில்லாமல் உள்ளனர். அவர்களெல்லாம் அடையாளப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதற்கு இந்த விருது மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பும், வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்தால் உலகளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றெடுக்க நிறைய மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். வரக்கூடிய பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தமிழக வீரர்கள் பெருமை தேடித் தருவார்கள்.கடந்த 2013-ஆம் ஆண்டு தேசிய அளவில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது அன்றைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றேன். வருகின்ற ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்வில் தற்போதைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தயான் சந்த் விருதைப் பெறவிருக்கும் தருணம் என் வாழ்வின் முக்கிய தருணமாகும்’ என்கிறார்.இதுவரை தன்னுடைய பயற்சியின் கீழ் தேசிய அளவில் தகுதிக்குரிய 400 மாணவர்களையும், சர்வதேச அளவில் தகுதிக்குரிய 100 மாணவர்களையும் உருவாக்கியிருப்பதாகப் பகிர்ந்து கொள்ளும் ரஞ்சித்குமார், வருகின்ற பாரா ஒலிம்பிக்கில் சாதனை படைக்கும் 10 தமிழக வீரர்களை உருவாக்கி தமிழகத்திற்கு நிச்சயம் பெருமை தேடித் தர முடியும் என நம்பிக்கையோடு நமக்கு விடை தருகிறார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!