கீழக்கரை நகரில் நகராட்சி நிர்வாகத்தினர் குப்பை மேடுகளை ஒழிக்க முன்வராத நிலையில், பள்ளிக் கூடங்களில் மட்டும் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொய்வின்றி நடத்தி வருகின்றனர். அதே வேளையில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளால் மாணவ மாணவிகளும், பள்ளி செல்லும் சிறார்களும் பாதிக்கப்பட்டு பள்ளிக்கு வர முடியாத நிலையில் நீண்ட கால விடுப்பில் இருக்கின்றனர்.
இந்நிலையில் கீழக்கரை மலேரியா கிளினிக் சார்பாக, அதிகாரி செல்லக்கண்ணு தலைமையில், நகர் முழுவதும் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து குடும்ப தலைவிகளுக்கு நல்லறிவுரை வழங்கி வருகின்றனர். நகராட்சியில் இருக்கும் ஐந்து கொசு ஒழிப்பு புகை மருந்து மிஷின்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி நகரின் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் புகை மருந்து அடிக்க வேண்டுமென்பதும், விரைந்து குப்பைமேடுகளை தூய்மைப்படுத்த வேண்டுமென்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி, ஆற வைத்து குடிக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். குளிருடன் கூடிய காய்ச்சல் இருந்தால் உடனடியாக மலேரியா கிளினிக்கில் இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கீழை நியூஸ் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
You must be logged in to post a comment.