Home செய்திகள் பத்ம பூஷண் விருது பெற்ற தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் பிறந்தநாள் இன்று (மார்ச் 21, 1923)

பத்ம பூஷண் விருது பெற்ற தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் பிறந்தநாள் இன்று (மார்ச் 21, 1923)

by mohan

திரு.நாச்சிமுத்து கவுண்டருக்கும், திருமதி.ருக்மணி அம்மையாருக்கும், மார்ச் 21, 1923ல் நா.மகாலிங்கம் பிறந்தார். அவரது தாத்தா பழனிக்கவுண்டர் பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர். பொள்ளாச்சியில் பள்ளி கல்வி முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டத்தை பெற்ற பின், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படித்தார்.தனது அத்தை மகள் மாரியம்மாள் அவர்களை 1945ல் மணமுடித்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் பிறந்தனர். மகாலிங்கம் அவரது தந்தை நாச்சிமுத்து அவர்கள் மாட்டுவண்டிகளில் தொழில் தொடங்கி, கார்களாகவும், லாரிகளாகவும், பேருந்துகளாகவும் உயர்ந்து பின் 1931ல் ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட்(ஏ.பி.டி) என்று தொடங்கிய நிறுவனம், சக்தி குழுமத்தின் நிறுவனங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. 21 பேருத்துகளில் தொடங்கிய ஏ.பி.டி நிறுவனம் 1946ல் 100 பேருந்துகளை கொண்ட நிறுவனமாக வளர்ந்தது. நாச்சிமுத்து அவர்கள் பொள்ளாச்சி நகராட்சி தலைவராகவும் இருந்தவர். 1934ல் நாச்சிமுத்து அவர்கள் மகாத்மா காந்தியை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தார். அப்பொழுது காந்தியைச் சந்தித்த மகாலிங்கம் சிறு வயதிலிருந்தே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வு கொண்டிருந்தார்.இவர் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் 29 வயதில் வெற்றி பெற்றார். பின்னர் 1957 மற்றும் 1962 ஆண்டுகளிலும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய உந்துதலால் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் மற்றும் பல்வேறு சமுதாய மற்றும் விவசாயத் திட்டங்களைப் பொள்ளாச்சிக்குப் பெற்று தந்திருக்கிறார். 1969 முதல் தீவிர அரசியலில் இருந்து விலகி, சமூக முன்னேற்றத்திற்காகக் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிப் பணிகளில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

பல்வேறு குழுமங்களுக்குத் தலைவராகவும் கவுரவத் தலைவராகவும் இருந்திருக்கிறார். மாநிலத் திட்டக் குழுமத்தில் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றிற்கும் பல்வேறு சமுதாய சேவைக்கும் பண உதவியும் செய்து வருகிறார். சென்னையில் அமைந்திருக்கும் ஆசிய ஆராய்ச்சிக் கழகம் இவரது உந்துதலால் 1981 ஆம் ஆண்டு உருவானது. இதுவரை 46க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ளார். 1974யில் ‘கிசான் வேர்ல்ட்’ என்ற வேளாண்மை மாதயிதழ் மற்றும் 1983யில் ஓம் சக்தி மாத இதழைத் தொடங்கினார். இவரது முக்கியமான கனவு, ரோமானிய மற்றும் கிரந்த லிபிகளை இணைத்து 52 எழுத்துக்கள் கொண்ட வடிவமாய் உருவாக்க பிரத்யேகமான மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்துவதாகும். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் மொழியின் விளக்கக் கூறுகளையும் உச்சரிப்பையும் பெருமளவு இணைய வாசகர்களுக்கு கற்பிக்க முடியுமென அவர் நம்பினார்.ஆங்கிலத்தில் MRG (Mahalingam Roman Grantha Script) என்று அவர் அதனை அழைத்தார்.இவருக்கு 2007ல் பத்ம பூஷன் விருது வழங்கி பாரத அரசு கௌரவித்தது.

அக்டோபர் 2, 2014ல் சென்னை மயிலாப்பூர் ஏ.வி.எம்.ராஜேஷ்வரி மண்டபத்தில் நடைபெற்ற காந்தி – வள்ளலார் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மயங்கியுள்ளார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!