Home செய்திகள் உலக வன நாள் இன்று (மார்ச் 21 )

உலக வன நாள் இன்று (மார்ச் 21 )

by mohan

புவியின் “நுரையீரல்கள்” என அழைக்கப்படும் காடுகள், இன்று மனித செயற்பாட்டின் காரணமாக அழிவடைந்துவருகின்றன. இதன் காரணமாக புவியின் வெப்பநிலை அதிகரித்து பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றோம். வனங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவும் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் மார்ச் 21ல் உலக வன நாளாக கொண்டாடப்படுகின்றது.இயற்கை பல வகையான உயிரினங்களும், மரங்களும், செடிகளும், அதில் விதவிதமான மலர்கள், காய்கள், கனிகள், உயிரினங்கள், என்று காலகாலமாக பரிணாம வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு இயற்கை என்று சொன்னாலே மனம் மகிழ்ச்சி அடைய கூடிய வகையில் இயற்கைக் காட்சிகள் நமது உள்ளத்தை பூரிப்படைய வைக்கும் திறன் கொண்டது. இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வளர்ச்சியில் மரபு வழியாக வந்த ஒரு இணைப்பு. மனிதர்கள் மன நிறைவு இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இயற்கையை விட்டு விலகி செயற்கையாக வாழ்வதே ஆகும்.

உலகில் 4 பில்லியன் ஹெக்டேயர்கள் நிலப்பரப்பிற்கு காடுகள் காணப்படுகின்றன. அதாவது, புவி மேற்பரப்பில் 31% காடுகள் சூழ்ந்துள்ளன. உலகில் அதிக பரப்பளவில் வன வளத்தைக் கொண்ட கண்டம் தென் அமெரிக்க கண்டம் ஆகும். தனது நிலப் பரப்பில் அரைவாசிக்கும் அதிகமான காடுகள் காணப்படுகின்றன. உலகில் குறைந்த பரப்பளவில் வன வளத்தைக் கொண்ட கண்டம் ஆசியாக் கண்டம் ஆகும். தனது நிலப் பரப்பில் 20% காடுகள் காணப்படுகின்றன. உலகில் அதிகளவில் வன வளங்களைக் கொண்ட நாடுகள் ரஷ்யா, பிரேசில், கனடா, ஐக்கிய அமெரிக்கா, சீனா ஆகியனவாகும். உலகில் அரைவாசிக்கும் அதிகமான காடுகள் இந்த நாடுகளிலேயே காணப்படுகின்றன.உலக வனங்களில் 20% ரஷ்யாவிலேயே காணப்படுகின்றன.

புவி மேற்பரப்பில் 6% ஈரவலயக் காடுகள் சூழ்ந்துள்ளன. உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கினங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை இக்காடுகளிலேயே காணப்படுகின்றன. அண்டாடிக்கா கண்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து கண்டங்களிலும் ஈரவலயக் காடுகள் காணப்படுகின்றன. தென் அமெரிக்க ஈரவலயக் காடுகளில் 2,000கும் அதிகமான வண்ணத்துப்பூச்சி இனங்கள் காணப்படுகின்றனவாம். மத்திய ஆபிரிக்க ஈரவலயக் காடுகளில் 8,000 இற்கும் அதிகமான தாவர இனங்கள் காணப்படுகின்றனவாம்.

உலகத்திற்கு தேவையான 20% ஆக்சிஜன் அமேசன் ஈரவலயக் காடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது வாழ்வாரத்திற்கு காடுகளிலேயே தங்கியுள்ளனர். உலகில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காடுகளிலே வாழ்கின்றனர்.உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கினர் தமது எரிபொருள் தேவையினை விறகுகள் மூலமே பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

இப்படி பட்ட இயற்கையை மனிதன் எப்படி சிதைக்கிறான் என்றால், உலகில் ஒவ்வொரு நிமிடமமும், கால்பந்தாட்ட மைதானத்தின் அளவான ஈரவலயக் காடுகள் அழிக்கிறான். உலகில் வருடாந்தம் 36 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பிலான இயற்கை காடுகள் அழிக்கப்படுகின்றன. இது இங்கிலாந்து நாட்டின் பரப்பளவினை விடவும் பெரிதாகும். காகிதாதி உற்பத்திற்காக உலகில் 50% ஆன மரங்கள் அழிக்கப்படுகின்றன. உலகில் 80%கும் அதிகமான காட்டுத் தீ மனிதனாலேயே உருவாக்கப்படுகின்றன.நேற்றைய மரங்களை பாதுகாப்போம் இன்றைய மரங்களை பராமரிப்போம் நாளைய மரங்களை பதியமிடுவோம் – மரமொழி.

நம்மை நம் சந்ததியினரை பாதுகாக்க இயற்கை நமக்கு தந்திருக்கும் வரமே மரங்கள். மரங்கள் துாய்மை கேட்டை குறைக்கும் தன்மை உடையன. நமது வாயு மண்டலத்தில் சுமார் 95 சதவீத காற்று, பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் உயரம் வரை வியாபித்துள்ளது. இந்த காற்று, சூரிய கதிர்களின் தாக்கத்தால் எடை குறைந்து மேலும் உயரச் செல்லும். நமது சுற்றுப்புற சீர்கேட்டால் காற்றில் கலந்துள்ள பலவகையான அசுத்த வாயுக்களின் அடர்த்தியாலும், மாசுபடிவதாலும் காற்றினால் உயர எழும்பி செல்லும் நிலை குறைந்து வருகிறது. இதனால் பூமியின் மேற்பரப்பு எளிதில் சூடாக வாய்ப்பு உள்ளது. பல்வேறு வகையான பசுந்தாவரங்கள், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிய வாய்ப்பு உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளாக உருவான ஒரு அங்குல வளமான மேல்மண், சில ஆண்டுகளிலேயே வளம் குன்றிவிடுகிறது. இயற்க்கையை நாம் அழித்தால் இயற்க்கை நம்மை அழித்துவிடும்.இயற்கையை பாதுகாப்போம் நம் சந்ததியின் உயிருக்காக..

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com