மதுரை அலங்காநல்லூர் பகுதியில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா செய்ததால் பரபரப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன் கிராமம் கிராமமாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரச்சாரம் முடிந்தவுடன் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தலா நூறு ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளவர் நாராயணசாமி. இவர் தேனி நாடாளுமன்ற தொகுதி சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் கிராமம் கிராமமாக சென்று தனக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் குமாரம் எனும் இடத்திலிருந்து தனது பிரசாரத்தை துவக்கிய நாராயணசாமி கோட்டைமேடு, கல்லணை, அலங்காநல்லூர் என பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது கல்லணை கிராமத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பிரச்சாரம் முடிந்து கிளம்பியவுடன் அங்கிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் பெண்களை வரிசையில் நிறுத்தி தலைக்கு ரூபாய் நூறு வீதம் பணப்பட்டுவாடா செய்தார். வீடியோ எடுப்பது கூட தெரியாமல் அவர் தீவிரமாக பண பட்டுவாடாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரச்சாரத்தில் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டிய நிலையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.