Home செய்திகள் அடேங்கப்பா!!ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டினின் நிறுவனம்..

அடேங்கப்பா!!ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டினின் நிறுவனம்..

by Askar

ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டினின் நிறுவனம்..

கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. கடந்த 2019 முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இதனை அந்நிறுவனம் வாங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதில் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த சூழலில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் அவர் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று பணம் ஈட்டியதாக மார்ட்டின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் சோதனை மேற்கொண்டு கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஏற்கெனவே முடக்கியது. கடந்த ஆண்டு மே மாதம் மட்டும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு ரூ.456.86 கோடி சொத்துக்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளில் மொத்தமாக 22 நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேலாக தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளன. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் வழக்கம் கடந்த 2018-ம் ஆண்டில் ‘தேர்தல் பத்திரம் திட்டம்’ மூலம் நடைமுறைக்கு வந்தது. இந்த சூழலில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com