செப்டம்பர் 8 சர்வதேச எழுத்தறிவு தினம்…

சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8ம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

1965ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானங்களில் ஒன்றாகும்.

இதனடிப்படையில் 1965 நவம்பர் 17ம் தேதி யுனெஸ்கோ நிறுவனம் கூடியபோது செப்டம்பர் 8ம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. இத்தினம் 1966ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுக்கிறது. தனி மனிதர்களுக்கும் பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதமையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது. பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். இன்று எழுத்தறிவு பல்வகைப்பட்ட தொடர்பாடல் முறைகளைப் பின்பற்றி ஒரு எழுத்தறிவுள்ள சமூகத்துடன் இணையாக பங்களிக்க கூடிய ஆற்றலைக் குறிக்கின்றது. இதில் கணித்தலும், கணினி பயன்பாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எழுத்தறிவைப் பின்வருமாறு வரையறை செய்கின்றது: “எழுத்தறிவு என்பது, பல்வேறு சூழ்நிலைகளுடன் தொடர்புடைய அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்டவற்றைப் பயன்படுத்தி அடையாளம் காண்பதற்கும், புரிந்து கொள்வதற்கும், விளக்குவதற்கும், ஆக்குவதற்கும், தொடர்பு கொள்வதற்கும், கணிப்பதற்குமான திறனைக் குறிக்கும். எழுத்தறிவு, ஒரு தனியாளுக்கு தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமுதாயத்தில் முழுமையாகப் பங்குபற்றுவதற்குமான ஆற்றலைப் பெறுவதற்குரிய தொடர்ச்சியான கல்வியைப் பெறுவதோடு தொடர்புடையது. “தற்காலத்தில் எழுத்தறிவுப் பிரச்சினை என்பது கல்வியால் தீர்க்கப்படவேண்டிய சமூகப் பிரச்சினையாக நோக்கப்படுகின்றது.

இவ்வாறாக எழுத்தறிவைப் பெற்றுக் கொள்ள முடியாமைக்கான காரணங்களாக உள்ள சமூக நிலைகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.வறுமை, போஷாக்கின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் எழுத்தறிவின்மை உலக நாடுகளில் இன்றும் காணப்படுகின்றது என்பதை ஏற்றாக வேண்டியுள்ளகல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான் என்ன? தேசிய ரீதியிலும், சர்வதேசரீதியாக இது தொடர்பான செயற்றிட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன? இவற்றை கொண்டு செல்வது யார் என்ற என்ற வினாக்களுக்கு நாம் விடை காணவேண்டியதாக உள்ளோம்.

எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஒரு அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனித வள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடுகள் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின்மை எனும் போது எந்த ஒரு மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமல் இருத்தலாகும் என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை தனது சாசனத்தில் வரையறை செய்துள்ளது. எழுத்தறிவின் பயனை அறிந்த பெற்றோர் தான் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். எழுத்தறிவு பெற்றோர் கல்வி வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர், மேலும் ஒரு கல்வி கற்ற சமுதாயமானது அபிவிருத்தி இலக்குகளை இனங்கண்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. ஆனால் உலகில் இன்று பல நாடுகள் பல பிரச்சினைகள் காரணமாக எழுத்தறிவை பெறமுடியாதுள்ளனர்.

சமீபத்தில் ஐ.நா சபை உலகில் அதிக எழுத்தறிவு உள்ள 177 நாடுகளை பட்டியலிட்டுள்ளது. அதில் இந்தியா 147வது இடத்தில் உள்ளது என்பது வெட்கப்படக்கூடிய விசயம். கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரியும் கியூபா நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நவீன இந்தியா – DIGITAL INDIA என்று கோஷமிட்டவாறு மாட்டிலும், மாட்டு மூத்திரத்திலும் அரசியல் செய்பவர்களும், விமர்சனத்தை எதிர்கொள்ளாமல் எழுத்தாளர்களை கொலை செய்யும் ஆட்சியாளர்கள் இருக்கும் வரை, இந்தியா கடைசி நிலைக்கு தள்ளப்பட்டாலும், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை…