வழிபாட்டுத் தலங்களில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கேரளாவில் லட்சக்கணக்கான பெண்கள் சேர்ந்து மனித சுவர் அமைத்தனர். இது ‘வனிதா மதில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதோடு, கேரள சட்டசபையையும் முடக்கினர். அதேசமயம் சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். தமிழக பெண்களும் சபரிமலை செல்ல முயன்று போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக கோயிலுக்கு செல்ல முடியாமல் மீண்டும் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பும் கூட பெண்கள் சபரிமலை சன்னிதானம் வரை செல்ல முடியாத சூழ்நிலையே உள்ளது. இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கேரளாவில் லட்சக்கணக்கான பெண்கள் சேர்ந்து மனித சுவர் அமைத்தனர். இது ‘வனிதா மதில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
அதாவது ஆணும், பெண்ணும் சமம் என்னும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் நீண்ட வரிசையில் நின்றனர். கேரள ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடத்தப்பட்ட இந்த மனித சுவர் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை சுமார் 620 கி.மீ தூரம் வரை பெண்கள் மனித சுவர் அமைத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வனிதா மதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள், உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர். அதேசமயம் உறுதிமொழியில் சபரிமலை குறித்த எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை.
01.01.19 மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த வனிதா மதில் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.