Home செய்திகள் கொரோனாவுக்கு “பலி” சீனாவை முந்தியது இத்தாலி:உலகளவில் சாவு 10 ஆயிரத்தை தாண்டியது இன்னும் மிஞ்சியிருப்பது 13 நாடுகள் மட்டுமே..

கொரோனாவுக்கு “பலி” சீனாவை முந்தியது இத்தாலி:உலகளவில் சாவு 10 ஆயிரத்தை தாண்டியது இன்னும் மிஞ்சியிருப்பது 13 நாடுகள் மட்டுமே..

by Askar

வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3,400ஐ தாண்டி உள்ளது. உலகளவிலான ஒட்டுமொத்த இறப்பு 10 ஆயிரத்துக்கும் அதிகமாகி விட்டது.

உலகில் வைரஸ் பரவாமல் எஞ்சியிருப்பது இன்னும் 13 நாடுகள் மட்டுமே. சீனாவில் தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இன்று பரவி விட்டது.

சீனாவில் 3,248 பேர் பலியான நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கையின் மூலம் அங்கு வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவின் புதிய தலைமையிடமாக இத்தாலி மாறியிருக்கிறது.

கடந்த பிப்ரவரியில் 2 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று இருந்த நிலையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் புதிதாக 20,000 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்ப கட்டத்திலேயே வைரஸ் பரவாமல் தடுக்கத் தவறியதால் இன்று இத்தாலியில் பலி எண்ணிக்கை சீனாவையும் மிஞ்சி விட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 427 பேர் இறந்துள்ளார். இதனால், இத்தாலியில் பலி எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது.

41,035 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதே போல பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 171 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 1000த்தை தாண்டி உள்ளது.

உலக அளவில் வைரசால் பலியானோர் எண்ணிக்கை 10,000த்தை தாண்டி விட்டது. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 10,450 ஆக உள்ளது.

2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் உள்ள மொத்த நாடுகளான 195ல் 182 நாடுகளில் கொரோனா பரவி விட்டது. இன்னும் 13 நாடுகளே எஞ்சி உள்ளன.

இந்த வைரஸ் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய திறனுடன் இருப்பதாக கூறி உள்ள ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ், ‘‘காட்டுத்தீ போல வைரசை பரவவிட்டால், குறிப்பாக தீவிரமாக நோய் தொற்றுள்ள நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கத் தவறினால், பல லட்சம் மக்களை கொரோனா கொன்றுவிடும்’’ என எச்சரித்துள்ளார். இத்தாலியில் நாடு தழுவிய முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த உத்தரவு ஏப்ரல் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரான்சிலும் 2 வார நாடு தழுவிய முடக்கம், மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவில் வரும் 31ம் தேதி வரை நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரபல கடற்கரைகள், ஓட்டல்கள் அனைத்து 15 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் பிற நாட்டவர்கள் வர தடை விதித்துள்ளன. சவுதி அரேபியாவில் அனைத்து முக்கிய மசூதிகளிலும் தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். தற்போது கொரோனா அச்சத்தால், இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மே 12ம் தேதி தொடங்க இருந்த இவ்விழா ஜூன் அல்லது ஜூலையில் நடத்தப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பீதியால், இலங்கையில் பொதுத் தேர்தல் நேற்று முன்தினம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை மறுதினம் வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி நேற்று மாலை 6 மணிக்கு அமல்படுத்தப்பட்ட தடை உத்தரவு திங்கட்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவு எதற்காக என அரசு தரப்பில் விளக்கம் தரப்படவில்லை.

மேலும், பொதுத் தேர்தலை நடத்துவதற்கான புதிய தேதி வரும் 25ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 25ம் தேதி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீனா மீது டிரம்ப் ஆத்திரம் அப்பவே சொல்லிருந்தா இப்படி நடந்திருக்குமா? அமெரிக்காவில் கடந்த 2 நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.

கொரோனாவுக்கு 217 பேர் பலியாகி உள்ள நிலையில் 14,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கலிபோர்னியா மாகாணம் முடக்கப்பட்டுள்ளது.

மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் மருந்துகள், கொரோனா பாதித்தோருக்கு தர அமெரிக்க சுகாதாரத் துறை அனுமதித்துள்ளது.

இது குறித்து நேற்று பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், சீனாவை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், ‘‘இந்த வைரஸ் தொடங்கிய சீனாவிலேயே இதை கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

ஆனால், சீனா எந்த விஷயத்தையும் வெளிப்படையாக கூறவில்லை. சரியான நேரத்தில் எச்சரிக்கவில்லை.

இதற்காக பெரும் விலையை இந்த உலகம் தந்து கொண்டிருக்கிறது’’ என்றார். ஏற்கனவே, கொரோனா வைரசுக்கு காரணம் சீனா தான் என அமெரிக்கா குற்றம்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com