ஆபத்தில் கூட உதவாத கீழக்கரை மின் வாரியம்….

கீழக்கரை நகராட்சி அந்தஸ்து அடைந்த பின்பு கூட மின்சார வாரிய ஊழியர்களின் எண்ணிக்ழைக தகுதியான அளவுக்கு உயர்த்தப்படாமல் இன்றளவும் பற்றாக்குறையான சூழலே இருந்து வருகிறது. சாதாரண மின் தடை முதல் ஆபத்து காலத்திற்கு அழைத்தாலும் கூட மின்சார ஊழியர்களின் சவுகரியத்திற்கு தகுந்தாற் போல்தான் காரியங்கள் நடக்கும்.

நேற்று (15/10/2018) 20வது வார்டு வடக்குத் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென உயர் மின் அழுத்தத்தால் வீட்டில் உள்ள டி.வி உட்பட அனைத்து மின்சார பொருட்களும் தீப்பிடித்து உபயோகமற்றதாகி கருகி போய் உள்ளது. அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் உதவியுடன் பொிய தீ விபத்து தடுக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் மின்சார வாரியத்தை பல வகையில் தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ள முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தெருவின் மத்தியில் உள்ள வீட்டில் நடந்ததால் அருகில் உள்ள மக்கள் காப்பாற்றியுள்ளார்கள். இதே சம்பவம் தனியான பகுதியில் நடந்து இருந்தால், உயிர் பலி ஆகியிருந்தால் கூட யாரும் உதவிக்கு வந்திருக்கமாட்டார்கள். அனைத்திலும் மிகை மாநிலம் என்று மார்தட்டி கொள்ளும் நிர்வாகம், அவசர காலத்தில் உதவ மின்சார வாரியத்தில் ஏன் ஒரு தனிப்பிரிவை உருவாக்க கூடாது என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் கேள்வியாக உள்ளது.