அவனியாபுரத்தில் இன்று (15/01/2019) ஜல்லிக்கட்டு துவங்கின..

அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

3 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும். பொங்கலன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உள்ளது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2 வாரமாக காளைகள், வீரர்கள் பதிவு, வாடிவாசல் அமைக்கும் பணி, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு பணிகள் போன்றவற்றுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

காலை 8 மணிக்கு தொடக்கம்:- இந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் மேற்பார்வையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் நடராஜன், நகர் போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர். இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று காலை இவர்களுக்கு 2-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 641 காளைகள் களம் காண்கின்றன.

பல்வேறு பரிசு:- ஜல்லிக்கட்டு போட்டியை காண பொதுமக்களுக்கு கேலரி, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மைதானத்தில் காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாமல் இருக்க தென்னை நார் போடும் பணி நடந்து வருகிறது. காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள், தங்க நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும். இதனிடையே முதன் முதலாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டது. இதற்காக பதிவு செய்த இளைஞர்கள் நேற்று அவனியாபுரத்தில் தங்கள் ஆவணங்களை கொடுத்து இன்சூரன்ஸ் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை நடந்தது.

செய்தி:- ஜெ.அஸ்கர்..