Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -20

(கி.பி 1299-1922)

பயாசித் அவர்களின் மகன் முகம்மது ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சிதறி இருந்த நிலப்பகுதிகளை ஒன்றாக்கி மீண்டும் உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தை கட்டமைத்தார்.

மூத்த அமைச்சராக தந்தை காலத்தில் பணியாற்றிய மீர்ஜாபரை மீண்டும் முதல் அமைச்சராக மன்னர் முகம்மது நியமித்தார்.

அமைச்சரின் ஆலோசனைகளை கேட்டு அதை மன்னர் பின்பற்றினார்.

அப்போது அவர் கூறிய பல செய்திகள் முகம்மதிற்கு ஆச்சரியமாக இருந்தது.

உஸ்மானிய மன்னர்கள் பலர் பல அரசியல் காரணங்களுக்காக பல திருமணங்களை செய்தனர்.

ஆனால் அனைவருமே முஸ்லீம் பெண்களையே திருமணம் செய்தனர்.

அரண்மனைகள் ஆடம்பரமில்லாமல் எளிமையாக சாதாரண மாளிகைகளாக இருந்தன.

மது, அழகிகள் கூட்டம், சொகுசு வாழ்க்கை போன்ற ஆடம்பரங்களை எந்த உஸ்மானிய சுல்தானும் விரும்பவில்லை.

ஆனால் உஸ்மானிய மன்னர்களிலேயே முதன்முறையாக மன்னர் பயாசித் அவர்கள் ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் புரிந்தார்.

ஆடம்பரமான அரண்மனை, பணிப்பெண்கள், மது என அந்தப்புர சொகுசுகளை பயாசித் அனுபவித்தார்.

தனது மாமனார், மற்றும் கிறிஸ்தவ மனைவி உடன் ஒன்றாக அமர்ந்து, எல்லோரும் மது அருந்தும் அளவு பயாசித்தின் வாழ்க்கை சீரழிந்து இருந்தது. அரண்மனையில் கேளிக்கைகள் மிகுந்து இருந்தன.

அதனால் அவர் தனது படை வீரர்களை சரிவர கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கான சம்பளங்கள், சலுகைகளை முறையாக வழங்கவில்லை.

ஆகவே பயாசித் அவர்களின் படைவீரர்கள் மிகுந்த சோர்வுடன் இருந்தனர்.

அவர் மிகுந்த கஞ்சத்தனத்துடன் நடந்து கொண்டார். ஏழைகள் மற்றும் அறிஞர்களுக்கு‌ உதவிகள் செய்யாமல் புறக்கணித்தார்.

பயாசித் அவர்களிடம் தூரநோக்கு சிந்தனையும், திட்டமிடல்களும், இல்லை.

தைமூரின் வலுவை புரிந்து அதற்குத்தகுந்த திட்டங்களை செயல்படுத்தி இருந்தால் பயாசித்திற்கு தோல்வி ஏற்பட்டு இருக்காது.

இதனால் அறிஞர்கள், அமைச்சர்கள், படைவீரர்கள் என பலதரப்பினரும் பயாசித்தோடு இணக்கமாக இருக்கவில்லை.

தைமூருக்கு எதிரான படையெடுப்பில் ஏனோதானோ என்று வந்த படைவீரர்கள் உடனடியாக தைமூரின் அணிக்கு மாறியதற்கு இதுவெல்லாம் காரணமாகி இறுதியில் தோல்வி ஏற்பட்டது.

தோல்வியின் மன சிதைவுகளால் இறுதியில் மரணமும் அவரை தழுவியது.

இந்த வரலாற்றை பயாசித்தின் மகனும் மன்னருமான முகம்மதிற்கு மூத்த அமைச்சர் மீர்ஜாபர் எடுத்து சொன்னார்.

ஆகவே இனி பேரரசை சரியான வழியில் ஆட்சி நடத்துங்கள் என்று வேண்டுகோளும் வைத்தார்.

மன்னர் முகம்மது சிதறிய பகுதிகளை எல்லாம் எட்டு ஆண்டுகள் ஆட்சியில்‌ ஒன்றிணைத்து சிறப்பாக ஆட்சி செய்தார்.

மரணம் இவரையும் தழுவியது. இவரது மகன் இரண்டாம் முராத் பதவி ஏற்றார்.

உஸ்மானிய பேரரசின் ஆட்சி அற்புதமாக மாறியது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com