Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -14

( கி.பி 1299-1922)

தைமூர் பயாசித்திற்கு எழுதிய கடிதம் இப்படி துவங்கியது.. ஷாஹின்ஷா பயாசித்.. உங்களின் அருமை நண்பர் தைமூர் எழுதுவது என துவங்கிய கடிதத்தை படித்த பயாசித் அசந்து போனார்.

தைமூரின் குணத்தை எடை போடுவது மிக சிரமமானது என்பதை பயாசித் புரிந்து கொண்டார்.

இதற்கிடையில் தைமூரின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. ஆசியாவின் பேரரசுகளில் ஒன்றான டெல்லி பேரரசு ஆட்டம் கண்டு இருந்தது.

ஃபெரோஸ் ஷா துக்ளக் மரணித்தபிறகு இந்தியா வங்காளம், காஷ்மீர்,தக்காணம் என பிரிந்து கிடந்தது.

ஃபெரோஸ்ஷா துக்ளக்கின் இளையமகன் மற்றும் பேரன்கள் என 10 ஆண்டுகளில் ஐந்து மன்னர்கள் ஆட்சியில் டெல்லி நிர்வாகம் சீர்குலைந்து இருந்தது.

இந்தியா வளமான பிரதேசம்.அதன் தலைநகர் டெல்லி சரியான ஆட்சியாளர்கள் இல்லாமல் தடுமாறுகிறது என்ற‌ செய்தி தைமூருக்கு கிடைத்தது.ஆகவே டெல்லியை கைப்பற்ற முடிவு செய்தார்.

டெல்லியை நோக்கி தனது 90,000 படைவீரர்களையும், இருமடங்கு குதிரைகளையும் இமயமலையை தாண்டி அழைத்து வருவது பெரும் சவாலாக இருந்தது.

சாமர்கந்து மற்றும் டெல்லிக்கு இடையே பனிபடர்ந்த மலைகள், சுட்டெரிக்கும் பாலைவனங்கள், ஏதும் விளையாத தரிசு நிலங்கள் என இருந்தன.

தைமூரின் வீரர்கள் பனி, வெப்பம், அனல் காற்று என பல கால நிலைகளை தாங்க வேண்டி இருந்தது.

போதுமான உணவுப் பொருட்களும் கிடைக்கவில்லை. ஆகவே படைவீரர்கள் இறுகிய மனம் படைத்தவர்களாகவும் முரட்டுத்தனமான குணம் கொண்டவர்களாக மாறிப்போயினர்.

தைமூரின் வீரர்களுக்கு தேவையான பொருட்கள் 1.5 லட்சம் குதிரைகளின் முதுகுகளில் சுமந்து எடுத்து வரப்பட்டது.

இன்றைக்கும் இந்தப்பகுதியில் பயணிக்கும் டாக்ஸி ஓட்டுநர்கள் இந்தப் பகுதியின் போக்குவரத்து‌ நிலை குறித்து புகார் செய்து கொண்டே இருக்கின்றனர்.

தைமூரின் வீரர்கள் பல போர்களையும் கடின சூழலையும் பார்த்தவர்கள், இருப்பினும் இந்த சூழல் அவர்களுக்கு மிகக்கடினமாகவும், சவாலாகவும் இருந்தது.

ஏராளமான குதிரைகள் வழுக்கி விழுந்து மாண்டன. பல போர்களில் வெற்றி பெற்ற மாவீரர் தைமூர் பல சமயங்களில் சாதாரண சிப்பாய் போல குதிரையிலிருந்து இறங்கி நடக்க வேண்டி வந்தது.

ஒருவழியாக ஆப்கானிஸ்தானின் காபூலை அடைந்து சட்லெஜ் நதியைக்கடந்து சில்லறை போர்களில் ஈடுபட்டு பலரை சிறைபிடித்து ஒருவழியாக டெல்லி அருகில் லோனி என்ற பகுதியில் படைகளின் முகாமை அமைத்தார் தைமூர்.

தைமூர் யமுனை ஆற்றின் அருகில் ஒரு உயரமான குன்றின் மீது ஏறி நின்று டெல்லியின் நிலையை ஆய்வு செய்தார்.

தைமூர் படை வந்து முகாமிட்ட செய்தியை ஒற்றர்கள் மூலம் அறிந்த டெல்லிசுல்தான் முதலில் கோட்டை கதவுகளை அடைக்க உத்தரவிட்டார்.

டெல்லி கோட்டைக்குள் பத்தாயிரம் குதிரை வீரர்கள்,120 யானைகள்,40,000 காலாட்படை வீரர்கள் என மிக குறைந்த படைபலமே காணப்பட்டது.

டெல்லியை அப்போது முஹம்மது ஷா என்ற மன்னர் ஆட்சி புரிந்தார்.ஆனால் டெல்லி படைகள் முழுவதும் மல்லு கானின் கட்டுப்பாட்டில் இருந்தது.

தைமூர் யானைகளை கண்டு கொஞ்சம் அஞ்சினார். யானைகளை சுற்றி இரும்பு கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.

யானையின் தந்தங்களில்‌ விசம் தடவப்பட்டு இருந்தது. அவை எதிராளியின் மீது பட்டால் எதிராளிகள் விசத்தால் பாதிக்கப்பட்டு உடனடி மரணம் கிடைக்கும் என்ற செய்திகளை எல்லாம் தைமூர் அறிந்து கொண்டார்.

யானை மீது உயரமாக அமர்ந்திருப்பவர்கள் அம்புகளையும், தீப்பந்தங்களையும் வெகுதூரம் வீசி எறிந்து படைகளுக்கு தேசங்களை விளைவிக்க முடியும் என்றும் தைமூர் அஞ்சினார்.

யானைகளை சமாளிக்க தைமூர் அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com