Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு-1

(கி.பி 750-1258)

யூப்ரடீஸ் நதியின் அலைகள் மென்மையாக சத்தமில்லாமல் கரையில் மோதியது.

அன்று வானம் நடு இரவிலும் பளீரென இருந்தது. முழுநிலவின் வெளிச்சம் அரண்மனையின் அந்த வெளிப்புற மாடத்தில் பட்டு சிதறியது.

வெண்பளிங்கு கற்கள் புதைக்கப்பட்ட அந்த மாடத்தில் தனது ஆசனத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் அப்பாஸிய பேரரசர் அபூ ஜாஃபர் அல் மன்சூர். பனிக்காற்று சில்லென்று வீசியது.

தனது அரசு மக்களுக்கு செய்யவேண்டிய திட்டங்களை யோசித்தார்.

உமைய்யா கிளர்ச்சியாளர்களை அடக்கி அப்பாஸியர்களின் பேரரசை தனது சகோதரர் அபுல்அப்பாஸ் அஸ்ஸஃபா அவர்கள் கைப்பற்றியது நினைவுகளில் காட்சிகளாக ஓடியது.

உமைய்யா கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அவர்களை தேடிப்பிடித்து மரணதண்டனை வழங்கப்பட்டது.

உமையாக்களை ஒழித்துவிட்டு ஓரளவு ஆட்சியை தனது சகோதரர் அபுல் அப்பாஸ் அஸ்ஸஃபா தனது தலைநகராக அன்பார் நகரை வைத்து ஆட்சி செய்ததும் உமைய்யா பெண்களை அடிமைகளாக அவர் பிடித்து வைத்ததும் மனதில் காட்சிகளாக விரிந்தன.

தனது சகோதரர் மரணித்த பிறகு தனது ஆட்சியிலும் மீதியிருந்த உமைய்யாக்களை அழித்ததை தவறாக தனக்கு தெரியவில்லை என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டார்.

ஒரே முஸ்லீம் உம்மத்தாக இருந்தாலும் ஆட்சி, அதிகாரம் என வரும்போது அரசநீதி இது எனவும் அப்போதுதான் அரசாங்கத்தை நிம்மதியாக ஆள முடியும் என தனது செயல்களுக்கு தானே நியாயமும் கற்பித்துக் கொண்டார்.

தனது சகோதரரின் ஆட்சியில் அந்தலூசியா என்னும் ஸ்பெயின் நாட்டிற்கு தப்பிச்சென்று அங்கு சிறப்பான உமைய்யா ஆட்சியை செய்துவரும் அப்துல் ரஹ்மான் இப்னு முஆவியத்துல் இப்னு ஹிஸாம் அவர்களின்ச சிறப்பான ஆட்சி பற்றிய செய்திகளும் அபூ ஜாஃபர் அல் மன்சூர் அவர்களுக்கு கிடைத்தது.

தனது சகோதரர் அபுல் அப்பாஸ் அஸ்ஸஃபா, உமையாக்களை அழிக்க உதவிய அலவி குடும்பத்தை சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு அலி,அபூமுஸ்லீம் குராசானி போன்ற ஷியாக்களை வளர விட்டால் தனக்கு ஆபத்து என்று அவர்களை கொலை செய்தார்.

அரசாட்சியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள செய்யப்படும் இதுபோன்ற கொலைகளை சரியென அதனை நியாயப்படுத்திக் கொண்டார்.

தானும் எந்த எதிரியையும் விட்டுவிடக்கூடாது கிளர்ச்சி செய்ய வாய்ப்பு அளிக்கக்கூடாது என்றே உமைய்யாக்களை தேடித்தேடி கொலை செய்வதையும் சரி என்றே மனதில் எண்ணிக் கொண்டார்.

தனது காலத்தில் அப்பாஸிய பேரரசை சிறப்பாக நிலைநிறுத்த ஒரு சிறப்பான தலைநகரை உருவாக்க திட்டமிட்டு அதன் பொறுப்பை காலீத் பர்மாக்கி என்ற கட்டிடக்கலை நிபுணரிடம் ஒப்படைத்தார்.

பாக்தாத் நகரத்தை மூன்று சதுர கி.மீ பரப்பளவில் சரியான பாதைகள் ,நீர் நிலைகளை அமைத்து உருவாக்கினார் காலீத் பர்மாக்கி.

பாக்தாத் நகரின் மையப்பகுதியில் அரச மாளிகையும், பிரமாண்டமான ஜும்மா பள்ளிவாசலும் கட்டப்பட்டன.

நகருக்கு யூப்ரடீஸ் நதியிலிருந்து கால்வாய் வெட்டி நீர் கொண்டுவரப்பட்டது. அதில் சிறிய படகுகள் வந்து செல்லும் அளவிற்கு நீர்ப்பாதைகள் அமைக்கப்பட்டன.

ராணுவ அணி வகுப்பிற்கு ஒரு பெரிய மைதானம் உருவாக்கப்பட்டது. அதில் ராணுவ வீரர்களின் பயிற்சிகள் நாள்தோறும் நடை பெற்றன.

யூப்ரடீஸ் நதியின் அந்த பெரிய கால்வாயின் மீது ஒரு இரண்டு அடுக்கு படகு ஊர்ந்து வந்தது. படகில் இருந்தவர்களின் பேச்சுக்களில் வெறுப்பு வழிந்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com