Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -22


(கி.பி 661-750)

யஜீது தனது மகன் இரண்டாம் முஆவியா அவர்களே அடுத்த வாரிசு என்று அறிவித்து இருந்தார்.

யஜீது மரணமடைந்த பிறகு பதவி ஏற்காத இரண்டாம் முஆவியா, நேராக ஜும்மா பள்ளிவாசலுக்கு வந்தார்.

மக்களை ஒன்று திரட்டி தனக்கு பதவியேற்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு தனது மாளிகைக்கு சென்றுவிட்டார்.
நாற்பது நாட்களில் அவரும் மரணமடைந்தார்.

பரந்துவிரிந்த பேரரசு.
இன்றைய 45நாடுகளை உள்ளடக்கிய பேரரசு.
ஒரு கோடியே பத்து லட்சம் கி.மீ நீளமுடைய எல்லைகளையும்,
மூன்று கோடியே இருபது லட்சம் சதுர கி.மீ பரந்து விரிந்த பேரரசு.

ஆப்பிரிக்கா முழுவதும், ஐரோப்பாவின் பாதி,
ஆசியாவின் பல பகுதிகள் என விரிந்திருக்கும் பேரரசு.

இதன் ஆட்சியை வேண்டாம் என்று ஒதுக்கிய இரண்டாம் முஆவியாவின் ஜனாஸா பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்தது.

குழப்பமான சூழல்.
அதுவரை ஆட்சித்தலைவரே இல்லை .
ஜனாஸா தொழவைக்க கடுமையான போட்டி நிலவியது.
ஜனாஸா தொழவைப்பவர் அடுத்த ஆட்சியாளராக ஆக வாய்ப்புகள் அதிகம்.

உமைய்யா குடும்பத்தை சேர்ந்த
உஸ்மான் இப்னு உத்பா அவர்கள் தொழவைக்க..தொழவைக்க..எங்கிருந்தோ
பறந்துவந்த ஒரு ஈட்டி அவரின் உயிரை பறித்தது.
ஒருவழியாக இரண்டாம் முஆவியாவின் ஜனாஸா அடக்கப்பட்டது.

மக்காவில் இருக்கும்
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி)அவர்கள் ஆட்சித்தலைவராக
பொறுப்பேற்க வேண்டும் என்று நிறைய மாகாண கவர்னர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி)அவர்களை, மக்காவில் போரில் தாக்கிய தளபதியே, அவரை அழைத்து, எங்கள் படையோடு வாருங்கள். டமாஸ்கஸ் போவோம்.
ஆட்சியை நீங்கள் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
அவரின் கோரிக்கையை அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் நிராகரித்தார்கள்.

டமாஸ்கஸ் கவர்னராக இருத்த லஹாக் இப்னு கைஸ் அவர்களும் இந்த‌மன
நிலையிலேயே
இருந்தார்கள்.
ஈராக் கவர்னரும் இதே மனநிலையில் இருந்தார்.

ஆனால் பாலஸ்தீன கவர்னராக இருந்த
ஹஸ்ஸான் இப்னு மாலிக் அவர்கள் உமைய்யா குடும்பத்தவரே ஆட்சியாளராக
வர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

தனது உதவியாளரிடம் இரண்டு கடிதங்களை கொடுத்து ஒன்றை கவர்னர் லஹாக் அவர்களிடம் கொடுத்து எனது கருத்தை கூறு.

அவர்கள் மறுக்கும் பட்சத்தில் ஜும்மா பள்ளியில் மக்கள் முன்னணியில் எனது கடிதத்தை வாசித்து விடு என்று கூறி தனது உதவியாளரை
டமாஸ்கசிற்கு அனுப்பி வைத்தார் பாலஸ்தீன கவர்னர்
ஹஸ்ஸான் இப்னு மாலிக்.

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் உமைய்யா குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல.
ஆகவே உமைய்யா குடும்பத்தில் மூத்தவரை அரசராகதேர்வு செய்யவேண்டும் என்ற கருத்தை
பாலஸ்தீன கவர்னரின் உதவியாளர் ஜும்மா பள்ளிவாசலில் மக்கள் திரளில் வாசிக்க மக்களும் அதனையே ஏற்றனர்.

மக்களின் மனநிலையை அறிந்த டமாஸ்கஸ் கவர்னர்‌ லஹாக் இப்னு கைஸ் இதற்கு எதிர் மனநிலையில் இருந்ததால்,
உயிருக்கு பயந்து டமாஸ்கஸை விட்டு வெளியேறினார்.

இறுதியாக உமைய்யா குடும்பத்தின் மூத்தவரான வயது முதிர்ந்த மர்வான்இப்னு ஹகம் அவர்கள் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார்.

இவர் முஆவியா (ரலி) குடும்பத்தை சேராதவர் ஆவார்.
ஆட்சிப்பீடம் முஆவியா (ரலி)
குடும்பத்திலிருந்து
மர்வான் இப்னு ஹகம் அவர்களின் குடும்பத்திற்கு மாறுகிறது.

இவர் பதவி ஏற்றபோது குழப்பங்களால் பேரரசு சிதைந்து இருந்தது.சிரியா எகிப்து மட்டுமே முழுக்கட்டுப்பாட்டில்‌ இருந்தது.

இவரின் ஆட்சி ஒருவருடமே நீடித்தது.
இவருக்கு பின் இவரது மகன் அப்துல் மலீக் இப்னு மர்வான் ஆட்சியாளராக பதவி ஏற்க வழி செய்திருந்தார்.

அப்துல் மலீக் இப்னு மர்வான் அவர்கள்,மிகச்சிறந்த ஹதீஸ் கலை வல்லுநர்.
மேலும் மதினாவின்
நான்கு சிறப்பிற்குரிய சட்ட வல்லுநர்களில் ஒருவர்.

மீண்டும் உமைய்யா முஸ்லீம் பேரரசை சீரமைக்க சில நடவடிக்கைகளை இவர் எடுத்தார்.

இதில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்களின் நியமனம் ஒன்று.
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்களின் நடவடிக்கைகள் ஏராளமான சர்ச்சைகளை உருவாக்கின. அவற்றை
தொடர்ந்து ஆராய்வோம்.

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு-23
(கி.பி 661-750)

உமைய்யா குடும்பத்தை சேர்ந்தவரும் தாயீப் நகரத்தை சேர்ந்தவருமான ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் மிகச்சிறந்த நிர்வாகி.

அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்வதற்கு எந்த எல்லைக்கும் செல்பவர்.

அப்துல் மலீக் இப்னு மர்வான் அவர்களது தந்தை காலத்தில் குழப்பங்களால் எகிப்து, சிரியா என
பேரரசு சுருங்கி இருந்தது.

அதனை மீண்டும் பேரரசாக உருவாக்க முதலில் எதிர்ப்புகளை அடக்கி சிதறிய பகுதிகளை ஒன்றிணைக்க முடிவுசெய்தார்.

மக்காவில் தங்கியிருந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களை அதிகமான கவர்னர்கள் மன்னராக பதவியேற்க வற்புறுத்தியும், அதை அவர் மறுத்து மக்காவிலேயே தங்கி இருந்தார்.

ஆகவே நிறைய கவர்னர்கள், அவரின் தலைமையையே விரும்பி அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களுக்கு
கட்டுப்பட்டு நடந்தனர்.

ஆகவே அரசர் அப்துல் மலீக் இப்னு மர்வான் அவர்கள்
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்களை மக்கா மதினா பகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமித்து அனுப்பினார்கள்.

மக்காவை அடைந்த அவர் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களை எதிர்ப்பை கைவிட்டு மன்னருக்கு ஒப்புதல் தர ஆணையிட்டார்.
அதை அவர் மறுக்கவே “மஞ்சனீக்” என்ற இயந்திரம் மூலம் நெருப்பு அம்புகளை பறக்க விட்டார்.

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களின் வீரர்கள்
குடும்பத்தினர் அனைவருமே ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்களின் அணிக்கு மாறிவிட்டார்கள்.

இதனால் சோர்வடைந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள், தனது தயார் அஸ்மா (ரலி) அவர்களிடம் ஆலோசனை செய்தார்.

உன் மனசாட்சி எது சரி என்று கூறுகிறதோ, அதன்படி செயல்படு எனக்கூற, நான் செல்லும் பாதையே சிறந்தது எனக்கூறி அவர்கள் எதிர்த்து நின்றபோது கொல்லப்பட்டார்கள்.

முழு மக்கா ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் தனது பதவியை பயன்படுத்தி ஏராளமான நபித்தோழர்களை பல காரணங்களுக்காக
கொன்றார்.
இவரது கொடுங்கோன்மை
வரலாற்றில் வடுக்களாக பதிந்து இருக்கின்றது.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள், கஃபாவை பழைய அளவில் பெரிதாக கட்ட ஆசைப்பட்டார்கள்.
அது நிறைவேறாமலேயே இருந்தது.

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி)அவர்கள்
கஃபாவை இன்றைய ஹத்தீமையும் உள்ளடக்கி முன் பின் வாசல்கள் வைத்து பெரிதாக கட்டினார்.

ஆனால் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் மக்காவை கைப்பற்றியபோது அவர் பழையபடி இன்றுள்ள அமைப்பில் இடித்து கட்டினார்.
அது இன்று வரை தொடர்கிறது.

அப்துல் மலீக் இப்னு மர்வான் அவர்கள்
சட்ட அறிஞராகவும்
ஹதீஸ் கலை வல்லுநராகவும் திகழ்ந்தாலும், ஆட்சியின் சுவையால் தனது தந்தை தனக்குப்பிறகு
தனது தம்பி அப்துல் அஜீஸ் அவர்களிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க‌வேண்டும்
என்று கூறிய கட்டளையை மீறி தனது மகன் வலீத் இப்னு அப்துல் மலீக் அவர்களை இளவரசராக அறிவித்து எல்லா மாநில கவர்னர்களிடமும் ஒப்புதல் வாங்கினார்.

இதனை மதினாவில் மஸ்ஜித் நபவி மதரசாவின் பொறுப்பாளராக இருந்த சயீது இப்னு முசைப் அவர்கள் மறுக்கவே அவரை சமாதானப்படுத்த
அவரது அழகிய மகளை தனது மகன் இளவரசருக்கு பெண் கேட்டார்.

அதை‌மறுத்த முசைப் அவர்கள் சாதாரண தனது ஏழை மாணவருக்கு மகளை கட்டி வைத்தார்.
அரசியலின் காய் நகர்த்தல்கள் விசித்திரமானது.

மன்னரின் சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்து விடவே இவர் நினைத்தது போல தனது மகன் அடுத்த வாரிசாக இருப்பதில் தடையில்லாமல் போனது.

அப்துல் மலீக் இப்னு மர்வான் அவர்களின் காலமும் முடிவுக்கு வந்தது.
அவரது இறப்பும் நிகழ்ந்தது.

முஸ்லீம்களின் ஸ்பெயின் நாட்டில் நுழைவு ,ஐரோப்பா வரலாற்றின் திருப்புமனை..!
தொடர்ந்து ஆராய்வோம்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!