Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யா பேரரசு-15 (கி.பி 661-750)

துருக்கிய தலைநகரான கான்ஸ்டாண்டி நோபுல் துறைமுகத்தில் ஒரு கப்பல் கூட இல்லை. துறைமுகமே வெறிச்சோடிக் கிடந்தது.

துறைமுகத்தில் சிறிது உள்ளே தள்ளி பெரிய மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்நியர்கள் படை எடுத்து வந்தால் சட்டென்று நகருக்குள் நுழைவதை தடுக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் பிரமிக்க வைத்தன.

முஸ்லீம்களின் கப்பல்கள் துறைமுகப் பகுதிக்குள் வந்து படைகள் தரையிறங்கிய சமயத்தில் திடீரென துருக்கிய கப்பல்கள் துறைமுகத்தின் இருபக்கங்களில் இருந்தும் அணிவகுத்து வந்தன.

சட்டென சுதாரித்து முஸ்லீம் வீரர்கள் கப்பல்களில் ஏறி துறைமுகத்தின் நடுப்பகுதியை விட்டுவிட்டு இருபுறமும் அரை சந்திர வடிவமாக அணிவகுத்தனர்.

இந்த திடீர் மாற்றத்தை கண்டு துருக்கிய தளபதி குழம்பிப் போனான்.

இருப்பினும் துறைமுகத்தில் காலியான நடுப்பகுதியில் நுழைந்தால் கோட்டை உள்ளிருந்தும் வீரர்களின் உதவி கிடைக்கும் என்று எண்ணினான்.

ஆனால் தரையிறங்கிய முஸ்லீம் படையின் பெரும் எண்ணிக்கையிலான வீரர்களை தரையிலேயே மறைவாக நிறுத்தி வைத்திருந்தார் தளபதி உக்பா.

துறைமுகத்தின் நடுப்பகுதியில் நுழைந்த துருக்கிய கப்பல்கள் இருபுறமும் முஸ்லீம்களின் கப்பல் படையாலும்,

முன்புறம் கரையிலிருந்த முஸ்லீம் படைகளினாலும், மும்முனை தாக்குதல்களில் நிலைகுலைந்த துருக்கிய கப்பல்படை தோல்வியுற்று சமாதானத்திற்கு வந்தது.

அனைத்து துருக்கி கப்பல்படை வீரர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஐம்பதிற்கும் மேற்பட்ட கப்பல்கள் சிறைபிடிக்கப்பட்டு முஸ்லீம்களின் கப்பல் படையோடு இணைக்கப்பட்டது.

தரைவழியில் படைநடத்தி வந்த இளவரசர் யஜீத் மற்றும் ஹஸன் (ரலி) அவர்களின் படையும் காண்ஸ்டாண்டி நோபில் கோட்டை அருகில் படைத்தளங்களை அமைத்தனர்.

பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் காண்ஸ்டாண்டி நோபுல் போரில் கலந்து கொள்வது சிறப்பு என்று கூறியிருந்ததால் ஏராளமான நபித்தோழர்கள் இந்தப் படையெடுப்பில் விருப்பத்துடன் கலந்து கொண்டனர்.

படையில் இருந்த மூத்த நபித்தோழரான அபூஅய்யூப்அல் அன்சாரி அவர்கள் மரணமடைந்தார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் உடல் காண்ஸ்டாண்டி நோபுல் கோட்டை மதில் சுவர் அருகேயே அடக்கம் செய்யப்பட்டது.

முஸ்லீம்களின் இராணுவ வலிமை அறிந்த கான்ஸ்டாண்டி நோபில் மன்னன் கோட்டை கதவுகளை திறக்க வில்லை.போருக்கும் வரவில்லை.

அதனால் முஸ்லீம்களின் படைகள் கோட்டையை முற்றுகையிட்டன.

சுமார் ஏழு மாதகாலம் முற்றுகை தொடர்ந்தும் ஏதும் முன்னேற்றம் நடக்கவில்லை.

முஸ்லீம் படைகள் கோட்டையை தகர்த்து முன்னேற முயன்றபோது, கோட்டைக்கு உள்ளிருந்து ஒருவித நச்சு வாயுவை கசியவிட்டார்கள். இதனால் முஸ்லீம் படை வீரர்கள் மயக்கமடைந்தும் சோர்ந்தும் போயினர்.

இதனால் தலைநகர் திரும்ப முடிவெடுத்து முஸ்லீம்களின் தரைப்படை சிரியாவை நோக்கி பயணித்தது.

கப்பல் படையும் சிறைபிடிக்கப்பட்ட பெரும்கப்பல்களோடு சிரியாவை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.

குராசான் பகுதிக்கு தளபதி முஹல்லம் தலைமையில் அனுப்பப்பட்ட படை குராசானை வென்றது.

தொடர்ந்து புகாராவையும், ஸாமர்கந்து,திர்மிஸ் ஆகிய நகரங்களையும் கைப்பற்றியது.

பாரசீகர்களின் குழப்பத்தை அடக்கி, ஆக்ஸஸ் நதியைக்கடந்து குபுக் அரசியின் ஆதிக்கத்திலிருந்த துருக்கியர்களை தோற்கடித்து கிழக்குப் பகுதிகளிலும் வெற்றி பெற்றது முஆவியா (ரலி) அவர்களின் உமைய்யா ராணுவம்.

ஆப்பிரிக்கா பகுதிகளின் வெற்றி வீரர் உக்பா அவர்களும், குராசானின் பகுதிகளின் வெற்றி வீரர் முஹல்லம் அவர்களும் முஆவியா (ரலி) அவர்களின் மாளிகையை அடைந்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!