ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

இராமநாதபுரம், நவ.5- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு பகுதிகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து, பதிவேடுகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார். ஆய்வுக்கூடம், மருந்துகள் இருப்பு வைப்பு அறை, நோயாளிகள் உடன் வருவோர் தங்கும் அறை, ஆரம்ப சுகாதார நிலைய உட்கட்டமைப்புகள் வசதிகளை பார்வையிட்டார். தினமும் சிகிச்சைக்கு வருவோருக்கு தாமதமின்றி உரிய சிகிச்சை வழங்க அறிவுறுத்தினார். மக்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென டாக்டர்கள், பணியாளர்களுக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தினார். வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப் உடன் இருந்தார்.