மதுரை:
மதுரை மாநகராட்சி மண்டலம் 1க்கு உட்பட்ட கோமதிபுரம், மேலமடை, வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் லி.மதுபாலன், ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் தூய்மைப்பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதன்படி மதுரை மாநகராட்சி கோமதிபுரம், அண்ணாநகர் வைகை காலனி உள்ளிட்ட பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு பயன்படுத்தும் குழாய்களின் தரம், பணியாளர்கள், பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் டுரிப் திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இப்பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், வார்டு எண்.35 அண்ணாநகர் செண்பகத் தோட்டம் பகுதியில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம் மற்றும் செண்பகத்தோட்டம் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். மேலமடை மெயின் ரோடு பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் சாலை திட்டப் பணிகள், மேலமடை மயானத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், பணியாளர்கள் விவரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மதுரை மாநகராட்சி வண்டியூர் பகுதியில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் 15 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவுநீரேற்று நிலையத்தின் நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணிகளை ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். இந்த கழிவுநீர் நிலையத்தில் மண்டலம் 1 மற்றும் மண்டலம் 2 க்கு உட்பட்ட 12 வார்டுகளில் சேரும் கழிவுநீர் கொண்டு வரப்பட்டு புதிய கழிவுநீர் நீரேற்று நிலையத்திற்கு கொண்டுவருவதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், மாட்டுத்தாவணி அருகில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடிநீர் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி பணியினை, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அவனியாபுரம் வெள்ளைக்கல்லில் செயல்பட்டு வரும் குப்பை சேகரிப்பு மையத்தில் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை பிரிக்கும் முறைகள், பணிபுரியும் பணியாளர்கள், குப்பைகளை மறுசுழற்சி செய்யும் முறைகள் மற்றும் உரம் தயாரிக்கும் இடத்தையும் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திடக்கழிவு மேலாண்மை மையத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை அதிகளவில் சேரவிடாமல் காலதாமதமின்றி உடனுக்குடன் தரம் பிரித்து உரமாக்கம் பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, தலைமைப் பொறியாளர் ரூபன் சுரேஷ், உதவி ஆணையாளர்கள் ரெங்கராஜன், வரலெட்சுமி, செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர்
மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்கள் காமராஜ், ஆரோக்கியசேவியர், முருகேசபாண்டியன், உதவிப் பொறியரளர்கள் அமர்தீப், பாபு,
செல்வவிநாயகம், பாலமுருகன் மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி, கார்த்திக்கேயன், பொன்னுளவன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.