இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டத்தைக் கைவிடக் கோரி ‘பேராசிரியர் ஜவாஹிருல்லா’ அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர். பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டத்தில் கீழ் வரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

1. திருப்புல்லாணி (SN 236) 2. பெரியபட்டிணம் (SN 26) 3. ரெகுநாதபுரம் (SN 61/1C) 4. பனைக்குளம் (SN 81/1D) 5. களரி (SN 6) 6. புள்ளந்தை (SN 3) 7. களரி (SN 335/2B) 8. புத்தேந்தல் (SN 208/1B) 9. திருப்புல்லாணி (SN 24) 10. உத்திரகோசமங்கை (SN 121/122) 11. அச்சந்திபிரம்பு (SN 125) 12. பட்டணம்காத்தான் (SN 375) 13. பட்டணம்காத்தான் (SN 150) 14. பழங்குளம் (SN 103/104) 15. சித்தார்கோட்டை (SN 180/1A5) 16. தேவிபட்டினம் (SN 333) 17. பெருநயல் (SN 414) 18. அத்தியூத்து (SN 221/222) 19. ஆற்றங்கரை (SN 113/2B) 20. கீழ் நாகாச்சி (SN 127/6A2) 21. பிரப்பன்வலசை (SN 107/2A) 22. சட்டகோன்வலசை (SN 150/2B).

#SN – சர்வே எண். வரிசை எண் – ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான எண்.

இது தொடர்பாக இன்று பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், ”ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் திருப்புல்லாணி, பெரியபட்டிணம், ரெகுநாதபுரம், பனைக்குளம், களரி,புள்ளந்தை, உத்திர கோசமங்கை, அச்சந்திபிரம்பு, பட்டணம்காத்தான், பழங்குளம், சித்தார்கோட்டை, தேவிப்பட்டினம், பெருநயல், அத்தியூத்து, ஆற்றங்கரை, கீழ்நாகாச்சி, பிரப்பன் வலசை, சுந்தரமுடியான் உள்ளிட்ட 22 இடங்களில் இந்திய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் கழகம் (ஓ.என்.ஜி.சி.) ஹைட்ரோ கார்பான் எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது என்று நான் கடந்த சட்டப்பேரவையில் 2015 செப்டம்பர் 18 அன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசினேன். இந்த திட்டத்தால் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்படும் ஆபத்துகளை எனது உரையில் குறிப்பிட்டேன். அன்றைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இத்திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என்று உறுதி அளித்தார்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதி யுனஸ்கோ அமைப்பினால் கடல்வாழ் உயிர்க்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் பகுதியில் இந்த எரிவாயு கிணறுகளை தோண்டுவதால் இங்கு வாழும் அரிய வகை டால்பின், ஆமைகள், கடல் பசு, பவளப்பாறைகள், கடல் புற்கள், சங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் தீர்த்தங்கரை பறவைகள் சரணாலயம், சக்கரக்கோட்டை கண்மாய் பறவைகள் சரணாலயம், திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாத பெருமாள் கோயில், தேவிப்பட்டிணம் நவ பாஷணம் தீர்த்தம் முதலிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு வெகு அருகில் எரிவாயு கிணறுகள் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இதனால் விவசாய நிலங்களுடன், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட பல்வேறு பல்லுயிர் பெருக்கமே ராமநாதபுரம் மாவட்டத்தில் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடலையே நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரமும், விவசாயத்தை நம்பியிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.

எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வளமும் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், சுற்றுச் சூழல் அபாயம் மிக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுமேயானால் ராமநாதபுரம் மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் இந்த திட்டத்தை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும்” என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.