Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மன்னார் வளைகுடா தீவுகளை கண்ணாடி படகுகளில் சென்று பார்க்க வனத்துறை ஏற்பாடு..

மன்னார் வளைகுடா தீவுகளை கண்ணாடி படகுகளில் சென்று பார்க்க வனத்துறை ஏற்பாடு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 குட்டி தீவுகள் உள்ளன. இக்கடல் பகுதியில் கடல் பசு, கடற்குதிரை, கடல் அட்டை, கடல் ஆமை உள்பட அரிய கடல் வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் காணப்படுகின்றன. உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகம் உள்ளதால் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட தேசிய கடல் பூங்கா செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பாம்பன் சாலை பாலத்தில் இருந்து கடலில் அமைந்துள்ள குட்டி தீவுகளை கண்டுகளித்த சுற்றுலா பயணிகளின் இயற்கை ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் தீவுகளுக்கு அழைத்து சென்று கடல்வாழ் உயிரினங்களை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள குருசடை, புள்ளிவாசல், சிங்கிலி, பூமரிச்சான் ஆகிய தீவுகள் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முதற் கட்டமாக தீவுகளை சுற்றிய பகுதிகள் மறுஎல்லை வரையறை செய்யப்பட்டு புதிய மிதவைகள் விடப்பட்டுள்ளன. ஏற்கனவே விடப்பட்டுள்ள மிதவைகள் சரியான எடை இல்லாததால் இந்திய தொழில்நுட்ப கழக (சென்னை) நிபுணர்கள் இந்த பகுதி கடல் மற்றும் அலைகளின் வேகத்தின் தன்மைக்கேற்ப மிதவைகள் மற்றும் கடலுக்கடியில் இறக்கப்படும் கான்கிரீட் கட்டமைப்புகளை வடிவமைத்து தயாரித்து வருகின்றனர். பாம்பன் குந்துகால் பகுதியில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மிதவைகள் தலா 500 மீட்டர் இடைவெளியில் 4 தீவுகளை சுற்றிலும் அமைக்கப்படும். இவ்வாறாக 28 மிதவைகள் 4 தீவுகளை சுற்றிலும் அமைக்கப்பட உள்ளன. இந்த சூழல் சுற்றுலா திட்டத்தின்கீழ் 4 தீவுகளையும் சுற்றுலா பயணிகள் நேரில் சென்று பார்வையிட்டு கடல் அழகு, அரிய கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் உள்ளிட்டவைகளை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பயணிகள் படகு ரூ.15 லட்சத்திலும், 2 கண்ணாடி இழை படகுகள் தலா ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ளது. இந்த படகு சவாரிக்காக பாம்பன் குந்துகால் பகுதியில் ரூ.5 லட்சத்தில் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. குருசடை தீவு பகுதியில் ஏற்கனவே உள்ள ஜெட்டி ரூ.2 லட்சத்தில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாம்பன் குந்துகால் ஜெட்டியில் இருந்து ஒரு பயணிகள் படகில் 20 பேரை அழைத்து சென்று குருசடை தீவு பகுதியில் இறக்கிவிடப்படும். அந்ததீவின் அழகை கண்டுகளித்த பின்னர் அங்கிருந்து கண்ணாடி படகில் மற்ற 3 தீவுகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அப்போது கடலுக்கடியில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள், பவளப்பாறைகள் உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகள் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

இதன்பின்னர் மீண்டும் குருசடை தீவு பகுதிக்கு கொண்டு வந்து இறக்கிவிட்டு அங்கிருந்து பயணிகள் படகு மூலம் குந்துகாலுக்கு திரும்ப அழைத்து வரப்படுவர். ஒரு நாளைக்கு 5 சுற்றுகள் இதுபோன்று அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படகு சவாரி காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறும். இதற்கான டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படும். இந்த பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும். அதிகபட்சமாக ஜூன் மாத தொடக்கத்தில் படகு சவாரி தொடங்க திட்டமிட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுநாள் வரை பாலத்தின் மீது இருந்து கடல் அழகு, தீவுகளை கண்டுகளித்த சுற்றுலா பயணிகள் இனி படகுகளில் சென்று நேரில் இயற்கை அழகை கண்டுகளிக்கலாம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!