விருதுநகரைக் கலக்கும் டி.ஆர்.ஓ – கலெக்டர் மோதல்!

விருதுநகர் மாவட்ட டி.ஆர்.ஓ-வுக்கு, கார் ஒதுக்க கலெக்டர் முன் வராததால் அலுவலகத்துக்கு டி.ஆர்.ஓ நடந்தே சென்று வருகிற காட்சியைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்ட டி.ஆர்.ஓ ஆனந்தக்குமார் மக்களோடு மக்களாகப் பழகக்கூடியவர் என்று பெயரெடுத்தவர். பொறுப்பேற்ற நாள் முதல் கலெக்டர் சிவஞானத்துக்கும் இவருக்கும் ஆகவில்லை. தொழிற்சாலைகள் மிகுந்த மாவட்டத்தில் டி.ஆர்.ஓ கறாராக இருந்து வந்ததும் கலெக்டருக்குப் பிடிக்கவில்லை என்கிறார்கள். இந்தநிலையில், போலி ஆர்.டி.ஓ-வாக வலம் வந்த சிவசுப்பிரமணியம் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் கலெக்டருக்கு நெருங்கிய நண்பராக இருந்தாராம். அவர் கைதுக்கு டி.ஆர்.ஓ ஆனந்தக்குமார்தான் காரணம் என்று கருதி டி.ஆர்.ஓ மீதான பழிவாங்கலை கலெக்டர் அதிகப்படுத்திவிட்டார் என்கிறார்கள். கலெக்டர் – டி.ஆர்.ஓ மோதல் விவகாரம் மாவட்ட மக்கள் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
கார் இல்லாமல் வீட்டுக்கு நடந்து சென்றது ஏன் என்று டி.ஆர்.ஓ ஆனந்தக்குமாரிடம் கேட்டோம், `எனக்கு கொடுக்கப்பட்டிருந்த அம்பாசிடர் கார் மிகவும் பழசாகி கண்டமான நிலைக்கு வந்துவிட்டதால், வேறு கார் ஒதுக்கும்படி கேட்டிருந்தேன். ஆனால், அதற்கு அனுமதிக்காத கலெக்டர் ரொம்ப பழசான ஜீப் ஒன்றைப் பயன்படுத்திக்கொள்ள சொல்லி அனுமதித்தார். அது பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பதால், நான் நடந்தே சென்றுகொள்கிறேன் என்று கூறிவிட்டேன். இது எனக்கு ஒரு பிரச்னையில்லை. நான் என் வேலையைச் சரியாகச் செய்து வருகிறேன். ஆனால், அரசு டி.ஆர்.ஓ-க்கென்று விதித்துள்ள வசதிகளைத் தருவதற்கு கலெக்டர் தடுப்பது குறித்து ஒன்றும் சொல்ல விரும்பவில்லை” என்றார். மாவட்ட நிர்வாகத்தில் கலெக்டருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் டி.ஆர்.ஓ. இப்படி உயர் பொறுப்பிலுள்ளவருக்கே இந்த நிலையா என்ற கேள்வி எழுந்துள்ளது.