கூட்டு பாலியல் பலாத்காரம், தலித் மாணவி கொலை…! அதிர்ச்சியில் விழுப்புரம்..

விழுப்புரம் மாவட்டத்தில் நர்சிங் மாணவியை காதலிப்பதாக கூறி வீட்டில் இருந்து அழைத்துச்சென்ற இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரி செல்லும் சாலையில் உள்ள தோட்டத்து கிணற்றில் இளம் பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். அவர் கழுத்தை நெரித்தும் , கல்லால் தாக்கியும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். காவல்துறையினரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த தலித் மாணவி என்பதும் அவர் வீட்டில் இருந்து 20ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறிய நிலையில் கொலைசெய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கியதில் அவர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் குணசேகரன் என்பவருடன் நீண்ட நேரம் பேசி வந்ததும் , சம்பவத்தன்று கடைசியாக் அவருடன் பேசி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து குணசேகரனை பிடித்து விசாரித்த போது நர்சிங் மாணவி கொலைக்காண பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.

அந்தபகுதியில் ஜீன்ஸ் பேண்டு கூலிங்கிளாஸ் சகிதம் ரோமியோ போல வலம் வந்த குணசேகரன், சில மாதங்களாக நர்சிங் மாணவியை விரட்டி விரட்டி காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியை தனது காதல் வலையில் வீழ்த்திய குணசேகரன் கடந்த 3 மாதங்களாக காதலிப்பதையே முழு நேரத்தொழிலாக செய்துவந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் எந்த ஒரு தவறுக்கும் இடம் கொடுக்காத அந்த மாணவியை திருமண ஆசைக்காட்டி வீட்டில் இருந்து வெளியே வருமாறு அழைத்துள்ளார் குண்சேகரன்.

குணசேகரனின் காதல் வார்த்தையை உண்மை என்று நம்பிய அந்த நர்சிங் மாணவியும் வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு காதலனுடன் தொடங்க உள்ள புதுவாழ்க்கையை எண்ணி வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

இருவரும் நடந்தே நெடுந்தூரம் சென்ற நிலையில் மாதவச்சேரி செல்லும் சாலையில் வைத்து , தான் வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்துள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக மாணவியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள காட்டு பகுதியில் ஒதுங்கி உள்ளான் குணசேகரன். அங்கிருந்தபடியே தனது நண்பர்களை செல்போனில் அழைத்து வரவழைத்துள்ளான்.

அங்கு வந்த நண்பர்களிடம் மதுவாங்கி வரச்சொல்லி, மாணவி எடுத்து வந்த பணத்தில் கொஞ்சத்தை கொடுத்து அனுப்பி உள்ளான் காதலன் குணசேகரன். விபரீதம் நிகழ்போவதை உணராமல் அந்த மாணவியும் குணசேகரனை நம்பி அங்கேயே இருந்துள்ளார். நண்பர்களுடன் மது அருந்திய குணசேகரன், போதையில் அந்த மாணவியுடன் தனிமையை கழித்துள்ளார். அவரை தொடர்ந்து அங்கிருந்த அவரது நண்பர்களான கோமுகி தாசன், ரட்சகன் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோரும் மது போதையில் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவி குணசேகரனிடம் கதறி அழுததால் அவரது கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளான் காதலன் குணசேகரன். உயிர் தப்பி விடகூடாது என்பதற்காக அவனது கூட்டாளிகள் மாணவியின் சடலத்தின் மீது அங்கிருந்த கற்களை தூக்கி போட்டுள்ளனர்.

பின்னர் மாணவியின் சடலத்தை 300 மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் வற்றிபோன கிணற்றில் வீசிவிட்டு தப்பி உள்ளனர் என்று காவல் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியும், கைது செய்யப்பட்ட காதலன் குணசேகரனும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.கூடா நட்பு மட்டுமல்ல, நம்பிக்கையற்றவர்களுடன் ஏற்படுகின்ற கூடா காதலும் கேடாய் முடியும் என்பதற்கு சான்றாய் மாறி இருக்கிறது இந்த கொடூர சம்பவம்..!