ஜாதி பெயரை சொல்லி திட்டியவருக்கு 10வருடம் ஜெயில்…1.24 லட்சம் அபராதம்..

காதலித்த பெண்ணை, ஜாதியை சொல்லி திட்டி சித்ரவதை செய்த வழக்கில் கமுதி அருகே சின்ன உடைப்பங்குளத்தைச் சேர்ந்தவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, இவரது பெற்றோர் மற்றும் உறவினர் 6 பேருக்கு தலா நான்கு ஆண்டு சிறை தண்டனை, ரூ .1.24 லட்சம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சின்ன உடைபங்குளத்தைச் சேர்ந்த சோனை முத்து மகன் சரவணன், 29. இதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண். வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்தனர். காதல் விவகாரம் வெளியே தெரிய வர சரவணன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான தகராறில் சரவணன் குடும்பத்தார் இளம் பெண்ணை ஜாதியைச் சொல்லி திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கமுதி மகளிர் போலீசில் 2015 மார்ச் 16 இல் புகார் கொடுத்தார். கமுதி தாசில்தார் விசாரணை அறிக்கை படி, கமுதி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தார். ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி முன் இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணனுக்கு பல்வேறு பிரிவுகளில் 10 ஆண்டு சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். இவரது பெற்றோர் சோனை முத்து 57, ஜெய லட்சுமி 52, இவர்களது மகன் கார்த்திக் 32, உறவினர் பாண்டி 52, சோனை முத்து மகள் கவிதா 32, உறவினர் அய்யம்மாள் 29 ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தார். மொத்த அபராத தொகை ரூ.1.24 லட்சத்தில் ரூ.1.20 லட்சத்தை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் காமராஜ் ஆஜரானார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..