5 ஏக்கருக்கு மேல் பதிவு செய்த 6,901 விவசாயிகளுக்கு காப்பீடு இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-17ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல், மிளகாய், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து  பயிர்கள், பருத்தி ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் ஆண்டில் 1,20,816 விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீட்டுத்  தொகையாக ரூ.533.5 கோடி, 2017-18ம் ஆண்டில் 1,44,803 விவசாயிகளுக்கு ரூ.472.182 கோடி, 2018-19ம் ஆண்டில் 82,106 விவசாயிகளுக்கு ரூ.304.625 கோடி மற்றும் 2019-20ம்  ஆண்டிற்கு 2,727 விவசாயிகளுக்கு ரூ.3.8 கோடி ஆக ரூ.1314.11 கோடி  இதுவரையிலும் இழப்பீட்டுத் தொகையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு  வைக்கப்பட்டுள்ளது.  2018 -19 ஆம் ஆண்டில் 283 கிராமங்களுக்கு ரூ. 304.63 கோடி இதுவரை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 5 ஏக்கருக்கு மேல் பதிவு செய்த 6,901 விவசாயிகளுக்கு, தமிழக அரசின் தொடர் முயற்சியால் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் ரூ. 61 கோடி  காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க ஒப்பளிப்பு செய்துள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகை  சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கிக் கணக்கில் நாளை (நவ. 4) காலை முதல் வரவு வைக்கப்படும். மீதம் உள்ள கிராமங்களுக்கு விரைவில் இழப்பீடு தொகை வழங்குவதற்கு இந்திய வேளாண்  காப்பீட்டு நிறுவனம் உறுதியளித்துள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.