திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் அளிக்கும் மிகப்பெரிய மருத்துவமனை மற்றும் தலைமை மருத்துவமனையாகவும் இருப்பது திண்டுக்கல்லில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாகும்.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் தங்களின் உடல் உபாதைகளை தீர்ப்பதற்காக நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வருகை தரும் நோயாளிகளில் காது மூக்கு தொண்டை தொடர்பான நோயாளிகளும் அடக்கம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இப்பிரிவில் இரண்டு மருத்துவர்கள் பணியாற்றியதால் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நோயாளிகள் தினசரி வந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆனால், இப்பொழுது இப்பிரிவில் பணியாற்றிய ஒரு மருத்துவர் பணிஓய்வு பெற்று சென்றுவிட்ட நிலையில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றுகிறார். இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. சம்மந்தப்பட்ட மருத்துவர் விடுப்பு எடுத்தாலோ அல்லது வேறு பணிக்கு சென்றுவிட்டாலோ அந்த பிரிவிற்கு சிகிச்சைக்காக வருகை தரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்க நேரிடுகிறது.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரிய அளவில் வேதனையை சந்திக்க வேண்டியுள்ளது. வாரந்தோறும் புதன்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படையான சலுகைகளை பெறுவதற்காக மருத்துவர் கையொப்பம் வாங்க வருகை தருவார்கள்.
இந்நிலையில் 17.1018 அன்று காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்ப்பட்டவர்கள் தங்களுக்கான மருத்துவ சான்றிதழ் வாங்க மதியம் ஒரு மணிவரை காத்திருந்தபோதும் சம்மந்தப்பட்ட மருத்துவர் வரவில்லை. பிறகுதான் காரணம் தெரிந்தது மருத்துவர் சென்னை சென்றுள்ளார்.
கடந்த காலங்களில் இரு மருத்துவர் இருந்தபோது ஒரு மருத்துவர் விடுப்பு எடுத்தால் அடுத்த மருத்துவர் வைத்தியம் பார்ப்பார் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழில் கையொப்பம் இடுவது போன்ற பணிகளில் எவ்வித தொய்வும் இல்லாமல் நடைபெற்று வந்தது.
எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் கூடுதல் மருத்துவரை (ENT) நியமித்திட தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர், S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கின்றனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.