Home செய்திகள் போதைப் பொருள் விவகாரம்!-பாஜக தலைவர்கள் பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது;அதிரடி காட்டிய ஆர்.எஸ்.பாரதி..

போதைப் பொருள் விவகாரம்!-பாஜக தலைவர்கள் பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது;அதிரடி காட்டிய ஆர்.எஸ்.பாரதி..

by Askar

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (04-03-2024) கடலுார் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது போல, எடப்பாடி பழனிசாமி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். தங்களது கூட்டணிப் பிரச்சினைகளைக் கையாள முடியாமல், யார் வருவார் எனக் காத்திருக்கும் அவர், தி.மு.க. மீது அவதூறுகளைப் பேசி வருகிறார்.

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை அனைத்துத் தரப்பினரும் மனதாரப் பாராட்டி உள்ளனர். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். நாட்டிலேயே, முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதை அவர்களால் ஏற்க முடியவில்லை.

அண்ணாமலை ஏதோ தமிழ்நாட்டில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பது போல பேசுகிறார். இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத். அதானிக்குச் சொந்தமான துறைமுகத்தில்தான் இந்தியாவினுடைய மொத்த போதைப் பொருள் கடத்தலும் நடக்கிறது என்று அனைத்துத் தரப்பினரும் கூறுகிறார்கள். இந்தியா முழுக்கப் போதைப் பொருள் பரவலுக்குக் காரணம் பாஜ.க.தான்.

போதைப் பொருள் விற்பனையில் பா.ஜ.க. தலைவர்கள் பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது. பஞ்சாப் – ஷோன்தி (23 கிலோ heroin வழக்கு) இவர் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். அவரை அமித்ஷா கட்சியில் சேர்க்கிறார். அதேபோல பா.ஜ.க. எம்.பி.,யின் மகன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் குட்கா வழக்கில் பலரும் சிக்கினர். யார் யார் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என்பது பத்திரிகைகளில் வந்தது. கட்சியைச் சேர்ந்த ஒருவர், போதைப்பொருள் புழக்கம் தொடர்பாகச் செயல்பட்டார் எனக் கேள்விபட்டவுடன், அடுத்த 24 மணி நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தி.மு.க. ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி செய்தாரா?

கடலூர் எம்.பி., மீது கூட ஒரு வழக்கு வந்தது. அவரையும் கட்சி காப்பாற்றவில்லை. அவர் சட்டரீதியாக வழக்கைச் சந்தித்து வருகிறார். தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி மீது குறை சொல்ல முடியாமல், பிரதமர் மோடி நினைத்ததை எல்லாம் பேசுகிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி துணைபோகிறார். 2016 தேர்தலில் கன்டெய்னர் லாரியில் பெரும் பணம் சிக்கியது. தி.மு.க. வழக்குத் தொடுத்தது. அது தொடர்பான சி.பி.ஐ. விசாரணையைத் தொடர்ந்து தாமதப்படுத்துகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியைச் சிதைக்க முயற்சித்தார்கள்; அது நடக்கவில்லை. கூட்டணி வலுவாகத் தொடர்கிறது. இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தவறான பிரசாரம் செய்கின்றனர். நகராட்சித் தேர்தலுக்கு வருவது போல பிரதமர் மோடி அவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவருக்கு ரோஷம் ஏற்பட்டு, மழை நிவாரண நிதியை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கும் அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவாரா எனப் பார்க்கலாம்.

கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலை தொடர்பான விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பான நி்கழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது, அதனை ஏற்கவில்லை என்பதை காட்டுகிறது. ஸ்டெர்லைட் ஆலையைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தி.மு.க. செயல்பட்டது. அதுபோல, கல்பாக்கம் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்போம். தமிழ்நாடு மக்கள் ஏற்காததை நாங்கள் ஏற்க மாட்டோம்.

தி.மு.க. கூட்டணியில் பிளவு இல்லை. நாளை மாலைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விடும் என நினைக்கிறேன். 7-ஆம் தேதிக்குள் தேர்தலுக்கு முழுமையாக தயாராகி விடுவோம். இ.வி.எம். இயந்திரத்தில் முறைகேடுகளைத் தடுக்கத் தேர்தல் ஆணையத்தில் பல புகார்கள் தந்து உள்ளோம் என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!