தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் நான்கு வருடமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கிறது அ தி மு க அரசு :தூத்துக்குடி கிராமசபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் குற்றசாட்டு..

பஞ்சாயத்து தேர்தலை நடத்தினால் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் நான்கு வருடமாக நடத்தாமல் இருக்கின்றது இப்போதைய அ தி மு க அரசு என்று தூத்துக்குடியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதில் திமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டு வருகின்றனர். கடந்த மாதத்தில் கனிமொழி எம்பி தலைமையில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள முடிவைதானேந்தல் பகுதியில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

சாலை வசதி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலைவாய்ப்பு, மின்பாதை சீரமைத்தல், குடிநீர் வினியோகம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்கள் முறையிட்டனர். அதற்க்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் ,மக்களின் குறைகள் அனைத்தும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொண்டு செல்லபடும் ,ஆட்சிமாற்றம் வந்தவுடன் மக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும்,அவர் கூடிய விரைவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என்ற அவர், பஞ்சாயத்து தேர்தலை நடத்தினால் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில்தான் நான்கு வருடமாக இந்த அரசு நடத்தாமல் இருக்கின்றது என்றார்.

அதைத் தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் குறிப்பிட்ட 7 பிரிவினரை தனியே பிரித்து பழங்குடியினர் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும், அதற்கு சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் திமுக ஆதரவளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.மேலும் மற்ற தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளுக்கு திமுக தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். ஆனால் தேவேந்திர குல சமுதாய தலைவர் சிலைகளுக்கு ஸ்டாலினும் மற்ற திமுக தலைவர்களும் மரியாதை செலுத்துவது இல்லை. மற்ற தலைவர்கள் போல் எங்கள் தலைவர்களுக்கும் திமுகவினர் மரியாதை செலுத்த வேண்டும் என அவரிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர் , ஆட்சி மாற்றம் வந்தவுடன் பணபலம் ஆள் பலம் இருக்க கூடாது என்று மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் கூறினார், மற்றொரு பெண் பேசுகையில் மேலும் திமுக ஆட்சி வந்தவுடன் ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிரந்தரமாக மூடபட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

ஊராட்சி சபை கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். அவருக்கு உங்களது ஆதரவை அளிக்கவேண்டும். தற்போதைய எம்பி, இந்த தொகுதிக்கு என்றைக்காவது வந்துள்ளரா? நல்ல எம்பியை தேர்ந்தெடுங்கள் தங்களது கோரிக்கைகள் அனைத்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ப்படும் என்று கூறினார்.

கூட்டத்திற்கு தி மு க தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் திருசெந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோயல், மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் டிடிசி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, ஊராட்சி செயலாளர் மாரியப்பன், முன்னாள் எம்பி ஜெயசீலன், திமுக நிர்வாகிகள் கருணாகரன், நடராஜன், சண்முகையா, கிருபாகரன், கபடி கந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.