உசிலம்பட்டி பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் நெற்பயிர்கள். விவசாயிகள் வேதனை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளான செல்லம்பட்டி, குப்பணம்பட்டி, வாலாந்துர், நத்தப்பட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிர்களை அதிகமாக பயிரிட்டுள்ளனர். விவசாயிகள் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு நிலத்தை உழவு செய்து நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லததால் நெற்பயிர் கருகிவருகின்றன. நிலங்கள் வறண்டுகிடக்கிறது. நெற்பயிர்கள் கருகிவருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையிலிருந்து அதிகபட்சம் 10 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே நெற்பயிர்களை காப்பாற்றமுடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.