இராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த லோக்சபா தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அகில இந்திய காங்கிரஸ் செயலரும், தமிழக தேர்தல் பார்வையாளருமான சஞ்சய் தத் கூறியதாவது: கடந்த லோக் சபா தேர்தலில் ஏராளமான பொய்கள் சொல்லி பாஜ., ஆட்சிக்கு வந்தது. இந்த ஆட்சி அம்பானிக்கும், அதானிக்கும் தான் ஆட்சி நடைபெறுகிறது. ஏழை மக்களுக்கு அல்ல. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய பாஜக., அரசையும், தமிழக அதிமுக அரசையும் குற்றம் சாட்டி வந்த பாமக தற்போது தேர்தல் கூட்டணி வைத்திருப்பது நியாயமல்ல. தமிழகத்திற்கு கொடுத்த ஒட்டு மொத்த நிதியையும் பிரதமர் மோடி குஜராத் கொண்டு சென்று விட்டார். டில்லியிலிருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் தமிழகத்தை மோடி இயக்கி வருகிறார்.
காஷ்மீர் புல்வாமா தீவிரவாத கும்பல் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப்., வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து ஓட்டு வாங்க மோடி முயற்சிக்கிறார். கஜ புயல் பாதிப்பின் போது தமிழகம் வராத மோடி தற்போது தேர்தல் நேரம் வந்தவுடன் தமிழகத்திற்கு அடிக்கடி வந்து நடிக்கிறார். தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளில் காங்., திமுக., கூட்டணி வெற்றி பெறும். இபிஸ்,ஓ பிஎஸ் தங்கள் பையை நிரப்புவதில் தான் குறியாக உள்ளனர். அதிமுக., பாஜ., பாமக அமைத்துள்ளது மெகா கூட்டணியல்ல. ஊழல் கூட்டணி . யார் பிரதமர் என்பதை விட பாஜக., பிடியில் இருந்து நாட்டை காக்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரசார் களப்பணியாற்ற வேண்டும். தற்போதுள்ள மோசமான சூழ்நிலையிலிருந்து இந்தியாவை காக்க ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். ஏழை எளிய மக்களுக்காக ராகுல் காந்தி களப் பணியாற்றி வருகிறார். கூட்டத்தில் தமிழக காங்.,செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டி, அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர்கள் செல்லத்துரை அப்துல்லா, செந்தாமரை கண்ணன், வேலுச்சாமி, நகர் தலைவர் கோபி, செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், உட்பட பலர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.