Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கொரோனோ லாக்டவுன் கொடூரம்.. வெளிவரும் காம கொடூரன்கள்..பாதித்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க கோரிக்கை..

கொரோனோ லாக்டவுன் கொடூரம்.. வெளிவரும் காம கொடூரன்கள்..பாதித்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க கோரிக்கை..

by ஆசிரியர்

லாக்டவுன் வந்தாலும் வந்தது. வீட்டில் முடங்கிய பொல்லாத காமுகன்கள், தங்கள் வழிக்கு வராத பெண்களின் வீடியோக்களை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் வெளியிட்டு பணம் பறிக்கத் தொடங்கியுள்ளனர்.

பொள்ளாச்சி விவகாரம் போல கடந்த மாதம் சென்னை டாக்டரின் ஆபாசப் புகைப்படங்களை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் போட்ட நாகர்கோவில், கோட்டாரைச் சேர்ந்த காசியை போலீசார் பிடித்து சிறையில் தள்ளியுள்ளனர். கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பிய கதையாக காசி பல பெண்களை இது போன்று மிரட்டி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. தற்போது அவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவன் தொடர்பாக யாராவாது புகார் அளிக்க வேண்டுமென்றால் எனது செல்போனுக்கே நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம் என்று கன்னியாகுமரி எஸ்பி ஸ்ரீநாதா அதிரடியாக அறிவித்தார். போலீஸ் காவலில் எடுத்து அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

அந்த விவகாரம் அடங்குவதற்குள் மதுரையில் சமூக வலைதளங்களில் பாலியல் புகார் ஒன்று புதிதாக முளைத்து போலீசாரின் புருவத்தை உயர்த்த செய்துள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் தனியார் பள்ளி, கல்லூரி மாணவிகளை மயக்கிய கும்பல் அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பதாக சமூக வலைதளங்களில் அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி, நாகர்கோவிலில் பாணியில் நடந்த சம்பவம் போல ஆபாச கும்பல் இணையதளத்தில் உலாவி மதுரை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டும் தகவல் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்ஆப்பில் பரவும் அந்த தகவலில், ‘‘தல்லாகுளம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் 3 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்துகின்றனர். தல்லா குளத்தில் உள்ள செல்போன் கடைகளுக்கு வரும் மாணவிகளின் செல்போன் எண்களை வைத்துக்கொண்டு எஸ்.எம்.எஸ் அனுப்பியும், செல்போனிலும் இளைஞர்கள் சிலர் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். காதல் பேச்சுக்கு மயங்கும் கல்லுாரி மாணவிகளை சொகுசு ஓட்டல்களுக்கு நேரில் வரவழைத்து, போதை கலந்த உணவை கொடுத்து, செல்போன், தங்கச்செயின் போன்றவற்றை பரிசாக கொடுத்து அவர்களை தங்கள் பக்கம் இழுக்கின்றனர். அவர்கள் போதைக்குப் பின்னர் சுய நினைவை இழந்து மயங்கியதும் அவர்களது ஆடைகளை களைந்து நிர்வாணப்படங்கள் எடுக்கின்றனர். அதனைக் காட்டி அந்த மாணவிகளை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்முறையில் ஈடுபடுத்திள்ளனர். மேலும் அவர்களை தொழிலதிபர்களுக்கு விருந்தாக்கி, அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். மதுவுக்கு மயங்கிய மாணவிகளுக்கு மதுபாட்டில்களை சப்ளை செய்து லாக்டவுன் சமயத்தில் ரகசிய இடங்களுக்கு வரவழைத்து பலான தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். பெரும்பாலும் வெளியூரில் இருந்து வந்து மதுரையில் ஹாஸ்டலில் தங்கிப்படித்து வந்த மாணவிகள்தான், பெண்களே இந்த கும்பலிடம் சிக்கியுள்ளனர்’’ என கூறப்பட்டிருந்தது.

பொதுவாக இது போன்ற பலான சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் துணிந்து புகார் வரமாட்டார்கள் என்பதை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டுதான் இது போன்ற செயல்களில் காமக்கொடூரன்கள் ஈடுபடுகின்றனர் என்பது பொதுவான கருத்து. நாகர்கோவில் காமுகன் சுஜி (எ) காசி விவகாரத்திலும் ஏராளமான பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க தயங்கியதால்தான் அவன் கடந்த பல ஆண்டுகளாக ஆபாசப்படங்கள் எடுத்து பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மதுரை விவகாரத்திலும் பாதிப்படைந்த பெண்கள் போலீஸ் நிலையம் சென்று புகார் அளிக்க தயங்கி இது போன்று வாட்ஸ்ஆப்பில் அவர்களைப் பற்றிய தகவல்களை பரப்பி அவர்களை கைது செய்ய போலீசாரை உசுப்பிவிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக மதுரை போலீஸ் கமிஷனர் கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது ‘‘பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குப்படுவது பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் பற்றி விசாரணை நடத்தி வரப்படுகிறது’’ என்று தெரிவித்தார். இது வலைதளங்களில் பரப்பப்படுகிறதே தவிர அது போன்ற புகார்கள் எதுவும் தல்லாகுளம் போலீஸ் நிலையத்துக்கு வரவில்லை என மதுரை போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் இது போன்ற சம்பவங்களில் பெண்கள் யாராவது பாதிக்கப்பட்டால் தைரியமாக வந்து புகார் அளிக்கலாம் என்று மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது, ‘‘தற்சமயம், மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் இன்னொரு கல்லுாரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக 3 இளைஞர்கள் மீது புகார் அடங்கிய பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளிந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக யாராவது புகார் தெரிவிக்க விரும்பினால் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் 94981 29498, இன்ஸ்பெக்டர் ஹேமமாலா 8300017920, கடுமையான குற்றங்கள் விசாரணைப் பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் 97905 99332 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். அவர்கள் அளிக்கும் புகார், பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com