பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்த, உலகின் முதல் நவீன வேதியியலாளர் இராபர்ட்டு வில்லியம் பாயில் நினைவு தினம் இன்று (டிசம்பர் 31, 1691).

இராபர்ட்டு வில்லியம் பாயில் (Robert William Boyle) ஜனவரி 25, 1627ல் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் இரிச்சர்டு பாயில் மற்றும் கேதரின் பென்றன் தம்பதியினரின் பதினான்காவது குழந்தையாக பிறந்தார். இரிச்சர்டு பாயில் அயர்லாந்தில் உள்ள டூடர் தோட்டங்களில் துணை நிர்வாகியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக 1588ல் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்துக்கு வந்தார். இரிச்சர்ட்டு பாயில் நில சுவானாக இருந்த காலத்தில் தான் இராபர்ட்டு வில்லியம் பாயில் பிறந்தார். அவர் குழந்தையாக இருந்த போது தன் மூத்த சகோதரர்களைப் போன்று அயர்லாந்து குடும்ப பின்னணியில் வளர்க்கப்பட்டார். பாயில் தனியார் பாடசாலை மூலம் இலத்தின், கிரேக்கம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றுக் கொண்டார். இவர் தனது எட்டாவது அகவையில் தாயை இழந்தார்.

பாயில் தந்தையின் நண்பரான சர்.ஹென்றி வோட்டன் இங்கிலாந்தில் உள்ள ஈட்டன் கல்லூரியில் ஆசிரியராக இருந்ததால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். இக்காலத்தில் இராபர்ட்டு காரே என்னும் தனியார் பயிற்றுநரை ஐரிசு மொழியறிவை இராபர்ட்டு வில்லியம் பாயில் பெற்றுக் கொள்ளுவதற்கு அவரது தந்தை பணி அமர்த்தினார். இருப்பினும் இவருக்கு ஐரிசு மொழியில் ஆர்வம் ஏற்படவில்லை. மூன்று ஆண்டுகள் ஈட்டனில் கழித்த பிறகு பிரெஞ்சு பயிற்றுநருடன் வெளிநாடு சென்றார். 1641ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டினைப் பார்வையிட்டனர். அந்நாட்களில் வாழ்ந்த கலிலியோ கலிலீ என்பவரின் பெரு நட்சத்திரங்களின் முரண்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும்படி குளிர்காலத்தில் பிளாரன்ஸ் மாகாணத்தில் தங்கினார்.

பாயில் ஒரு இரசவாதி ஆவார். மேலும் உலோகங்கள் மாற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பி இவர் அதை அடைவதற்கான முயற்சியில் சோதனைகள் செய்தார். மேலும் பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஒரு பிஸ்டனைக் கொண்டு வந்தனர் (நாம் போட்டுக் கொள்ளும் ஊசி போன்றது). அந்தப் பிஸ்டனை ஒருபுறம் அழுத்தும் போது உள்ளிருக்கும் வாயுவால் அழுத்தம் ஏற்பட்டு மீண்டும் பிஸ்டன் பழைய நிலைக்கு வர முயன்றது. ஆனால் அதனால் முடியவில்லை. எனவே வாயுவுக்கான அழுத்தம் சரிசமமானது அல்ல என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் நிரூபிக்க முனைந்தனர். பாயில் மட்டும் இந்தச் சோதனை சரியானதல்ல என்றார். பிஸ்டன் மிகவும் கடினமானதாக இருப்பதால் வாயுவால் திரும்ப அதே நிலைக்கு வைக்க முடியவில்லையே தவிர, வாயுவுக்கான அழுத்தம் சரிசமமானதாகவே இருக்கும் என்றார். சில நாட்களில் அப்படி ஒரு பிஸ்டனைத் தான் தயாரித்து தன் வாதத்தை நிரூபிப்பதாகவும் சவால் விட்டார்.

இரண்டு வாரங்கள் கழித்து, ஒரு ஆங்கில ‘U’ வடிவக் குழாய் ஒன்றை எடுத்து வந்தார். அதில் ஒருபுறம் மற்றொன்றை விட மூன்றடி உயரமாக இருந்தது. உயரமாக இருந்த பகுதி ஒல்லியாகவும், உயரம் குறைந்த பகுதி தடிமனாகவும் இருந்தது தடிமனாக இருந்த பகுதியின் மேற்புறம் அடைக்கப்பட்டிருந்தது. பாதரசத்தை இந்தக் குழாயின் ஒருவழியாக ஊற்றினார் பாயில். பாதரசம் இரு குழாய்களிலும் சிறிது மேலேறும் வரை ஊற்றப்பட்டது. இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு காற்று அடைக்கப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டது. பிஸ்டன் என்பது காற்றைப் பிடித்து வைக்கும் ஒரு உத்தி ஆகும். இப்போது இங்கும் காற்று பிடித்து வைக்கப்பட்டதால் இது ஒரு பிஸ்டன் என்றார் பாயில். இப்போது பாதரசம் இருந்த இடத்தைக் குறித்துக் கொண்ட பாயில், மீண்டும் கொஞ்சம் பாதரசத்தை இந்தப் புறமிருந்து ஊற்றினார்.

இப்போது அந்தப் பகுதியிலிருக்கும் காற்று அழுத்தப்பட்டு இன்னும் கொஞ்சம் உயரத்திற்கு பாதரசம் ஏறியது. இப்போது பாதரசம் இருந்த இடத்தைக் குறித்துக் கொண்ட பாயில், மீண்டும் பாதரசத்தைக் அந்தக் குழாயின் கீழிருக்கும் ஒரு வால்வு மூலம் வெளியேற்றினார். இப்போது மீண்டும் பாதரசம் பழைய இடத்திற்கே வந்து நின்றது. இதன் மூலம் காற்றின் அழுத்தம் சரிசமமானதே என்று நிரூபித்தார் பாயில். அதுமட்டுமல்ல, காற்றின் மேல் வைக்கும் எடைக்குத் தகுந்தவாறு அது கொள்ளும் கொள்ளளவும் எதிர்மறையாக‌ மாறுகின்றது என்று கண்டறிந்தார். அதாவது மூன்று பங்கு எடையைத் தூக்கி வைத்தால், மூன்றில் ஒரு பங்கு இடத்துக்குள் காற்று நிரம்பி விடுகின்றது. இந்த விதியின் மூலமாகப் பலப் பல அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பாயில் உலகின் முதல் நவீன வேதியியலாளராகக் கருதப்படுகிறார். நவீன வேதியியலுக்கு அடித்தளம் இட்டவர். நவீன சோதனை அறிவியல் முறையின் முன்னோடிகளில் ஒருவர். ஒரு மூடிய அமைப்பில் உள்ள வளிமத்தின் வெப்பநிலை மாறாதிருக்கும் போது அதன் அழுத்தத்திற்கும் கன அளவுக்கும் உள்ள தொடர்பு எதிர் விகிதத்தில் இருக்கும் என்னும் பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்தார். பாயி்லின் விதி (Boyle’s law) என்பது கன அளவின் மீதான அழுத்தத்துக்கு உட்படும் போது வாயுக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை விளக்கும் விதி அகும். இவ்விதியின்படி மாறாத வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தமும் அதன் கன அளவும் எதிர் விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன. இதனை 1662 ஆம் ஆண்டில் ராபர்ட் பாயில் என்னும் விஞ்ஞானி கண்டுபிடித்தார். இதனைக் கணித முறையில், P ∞ 1/V, ( மாறாத வெப்பநிலையில்) அல்லது PV = k, (ஓர் மாறிலி) வெப்பநிலை T ஆகவும், வாயுவின் கன அளவு V1 ஆகவும் உள்ளபோது அழுத்தம் P1 ஆக இருக்கும். அதே வெப்பநிலையில் வாயுவின் கன் அளவு V2 ஆகவும் அதன் அழுத்தம் P2 ஆகவும் இருந்தால் இவ்விதியின்படி P1V1 =P2v2 = மாறிலி என்று எழுதலாம்.

தி ஸ்கெப்டிகல் கைமிஸ்ட் என்னும் நூல் வேதியியல் துறையில் மூல நூலாகக் கருதப்படுகிறது. இராயல் சொசைட்டி என்னும் அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவராய் இருந்த பாயில் Fellow of the Royal Society (FRS) 1663ல் இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்த, உலகின் முதல் நவீன வேதியியலாளர் இராபர்ட்டு வில்லியம் பாயில் டிசம்பர் 31, 1691ல் தனது 64வது அகவையில் இலண்டன், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். பாயில் விதி என்பது இவரது பெயரை ஒட்டி வழங்கப்படுகிறது. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.