மாவட்டத்தில் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ள தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு வீரர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு…

கஜா புயல் தொடர்பான இந்திய வானியல் துறை அறிவிப்பினை தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் இன்று (13.11.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்களை நேரில் சந்தித்ததோடு மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ள நவீன இயந்திரங்களை பார்வையிட்டார்.

அதன்பின்பு மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  இந்திய வானியல் துறை கஜா புயல் 15.11.2018 அன்று தமிழகத்தில் உள்ள கடலூர் முதல் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயான கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என அறிவித்துள்ளது.  அதன்படி 14.11.2018 மாலை முதல் 15.11.2018 முற்பகல் வரை காற்றின் வேகம் மிக அதிகமாகவும், கனமழை, மிக கனமழை போன்ற சூழ்நிலை நிலவும் எனவும், அதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்திட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் கஜா புயல் தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.       மாவட்டத்தில் எளிதில் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 39 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 15 மண்டல அளவிலான பாதுகாப்புக் குழுக்களும்ää இதர துறை அலுவலர்கள் கொண்ட குழுக்களாக 135 குழுக்களும், 429 ஊராட்சிகளில் 5,588 முதல்நிலை மீட்பு பணியாளர்களை கொண்டு  முதல்நிலை மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அவசர கால செயலாக்க மையம் 24 மணிநேரமும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவித்திட ஏதுவாக 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்  செயல்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைப்பதற்கு 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 32 பள்ளிகள், 2 கல்லூரிகள், 91 திருமண மண்டபங்கள் என 148 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.  இக்குழுவில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் இரண்டு சார்பு ஆய்வாளர்கள் உட்பட பேரிடர் மீட்பு பணிகளில் மிகவும் தேர்ச்சி பெற்ற மொத்தம் 25 வீரர்கள் உள்ளனர்.  மேலும், இக்குழுவினர் மூலம் மிதவை படகுகள், மீட்பு பணிகளின் போது மரம், உலோகம், கான்கிரீட் போன்றவற்றை அறுப்பதற்கான நவீன இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  இதுதவிர, முதலுதவி சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகள், அதனை கையாளுவதற்கான பயிற்சி பெற்ற மருந்தாளுநர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல,  மாநில காவல் துறையின் சார்பாக மாநில பேரிடர் மீட்பு குழு பயிற்சி பெற்ற வீரர்கள் இரண்டு குழுக்களாக, குழுவுக்கு தலா 40 வீரர்கள் என மொத்தம் 80 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.  சூழ்நிலைக்கு ஏற்ப இத்தகைய தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதுதவிர, மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு கஜா புயல் குறித்து முறையான முன்னறிவிப்பு வழங்கப்பட்டு, மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  கஜா புயல் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்ää அதே வேளையில் புயல் குறித்து எவ்வித அச்சமும் அடைய தேவையில்லை எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.   தொடர்ந்து, இராமநாதபுரம் காவல் ஆயுதப்படை காவாத்து மைதானத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் உள்ள மாநில பேரிடர் மீட்பு குழு வீரர்களை சந்தித்ததோடு, மீட்பு பணிகளுக்கான நவீன இயந்திரங்களையும் பார்வையிட்டார்.

 அதனைத்தொடர்ந்து பிரப்பன்வலசை, இராமேஸ்வரம் அருகே உள்ள கரையூர், பேய்க்கரும்பு கிராமம் ஆகிய இடங்களில் உள்ள பல்நோக்கு புகலிட பாதுகாப்புக் கட்டிடங்களின் தயார்நிலை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.  அதேபோல எளிதில் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ள இராமேஸ்வரம் மாந்தோப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.  இந்த நிகழ்வுகளின்போது, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி.கண்ணன், இராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் எம்.நடராஜன், தேசிய பேரிடர் மீட்பு குழு ஆய்வாளர் பி.கே.மீனா உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.