Home செய்திகள் வெளிநாடு வாழ் இந்தியர் உட்பட அனைத்து தகுதியான வாக்காளர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை – ஆட்சியர் கூட்டத்தில் கருத்து…

வெளிநாடு வாழ் இந்தியர் உட்பட அனைத்து தகுதியான வாக்காளர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை – ஆட்சியர் கூட்டத்தில் கருத்து…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (19/12/2018(  நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பார்வையாளர் (கோ- ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் டி.என்.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள்  முன்னிலையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பார்வையாளர் டி.என்.வெங்கடேஷ் தெரிவித்தாதவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் 01.09.2018 இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 1307 பாகத்தில் 5,56,614 ஆண், 5,57,369 பெண் 65 மூன்றாம் பாலினத்தவர் என 11,14,048  வாக்காளர்களாக இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி 01.01.2019 ஆம் நாளை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள  ஏதுவாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாகவும், 01.09.2018 முதல் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் 09.09.2018, 23.09.2018, 07.10.2018, 14.10.2018 தேதிகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பெயர் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதன் மூலம் பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியல் புதிதாக பெயர் சேர்ப்பதற்காக (படிவம் 6) 20,234 விண்ணப்பங்களும் பெயர் நீக்கம் செய்வதற்காக (படிவம் 7) 10,830 விண்ணப்பங்களும் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் செய்வதற்காக (படிவம் 8) 4,034 விண்ணப்பங்களும், இடமாற்றம் செய்வதற்காக ( படிவம் 8 ஏ) 1,449 விண்ணப்பங்களும் என 36,547 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது வீடு  வீடாக சென்று கட்டாயம் கள ஆய்வு செய்து உறுதி செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரையும் விடுபடாமல் வாக்காளர் புகைப்பட்டியலில் சேர்ப்பது நமது கடமையாகும்.

இந்திய தேர்தல் ஆணையம் . தேர்தல் நடவடிக்கைகள் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை உறுதி செய்திட ஏதுவாக  பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்திட அறிவுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி  மையங்களில் சிரமமின்றி வாக்கு செலுத்திடும் வகையில் சக்கர நாற்காலி, சாய்வு தள வசதி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரெய்லி முறையிலான பட்டியல் போன்றவற்றை ஏற்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்து ஆய்வு செய்து தகுதியான வாக்காளர்களின் பெயர்களை விடுபடாமல் வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தி தகுதியான வாக்காளர்களின் பெயர் சேர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் செயல்பட்டு வரும் கேம்பஸ் அம்பாசிடர்கள் மூலமாக வாக்குப்பட்டியலில் பெயர் சேர்க்காத மாணாக்கர்களை வாக்காளர்களாக பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறப்பாக செயல்படும் கேம்பஸ் அம்பாசிடர்களை ஊக்குவித்திடும் வகையில் சான்றிதழ் வழங்கி பாராட்டிட வேண்டும். நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்தல், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதே வேளையில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அந்தந்த  பகுதிகளிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்த வாக்குச்சாவடி முகவர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அதிக அளவில் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட முடியும் என வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பார்வையாளர் வெங்கடேஷ் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணு  சந்திரன்,ராமநாதபுரம் கோட்டாட்சியர் சுமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!