இராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பிளக்ஸ், டிஜிட்டல் பேனர்கள் வைத்தால் அகற்ற நடவடிக்கை – ஆட்சியர் வீரராகவ ராவ் பேச்சு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள், தட்டி போர்டுகள்  வைப்பதை ஒழுங்குபடுத்த அரசியல் கட்சி பிரமுகர்கள்,  அலுவலர்கள் சிறப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது. அரசியல் மற்றும் இதர நிகழ்ச்சிகள் தொடர்பாக டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள், தட்டி போர்டுகள் வைக்க விரும்புவோர் அரசு விதித்துள்ள சில நடைமுறைகளை பின்பற்ற  வேண்டும் என தமிழக அரசாணை , சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சாலையின் இரு புறங்கள், சாலை விளிம்புகள், பிளாட்பார நடைபாதைகள், பெருஞ்சாலைகள், இதர சாலைகளில் வைக்கக் கூடாது. இத்தகைய இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள், தட்டி போர்டுகளை வைப்பதால் கவனம் சிதறல் மட்டுமின்றி பாதசாரிகள் பாதிக்கும் சூழ்நிலை உருவாகும்.  டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் தட்டிபோர்டுகள் வைக்க அனுமதி கோருவோர் படிவம் 1-ஐ பூர்த்தி செய்து டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள், தட்டி போர்டுகள் வைக்கப்படும் நோக்கம், அளவுகளுடன் வைக்கப்படும் இடம் தனி நபர் அல்லது கட்டடமாக இருப்பின் கட்டட உரிமையாளர் ஒப்புதல் கடிதம், அதன் வாசகங்கள் , அதில் இடம் பெறும் படங்களுடன் சம்பந்தப்பட்ட பகுதி காவல் துணை கண்காணிப்பாளர், காவல்  ஆய்வாளர் தடையின்மைச் சான்று மற்றும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியில் அனுமதிக் கட்டணம் செலுத்தி (கட்டப்படும் கட்டணங்கள் திருப்பி தரப்பட மாட்டாது) அதற்கான அசல் சலானுடன் மாவட்ட ஆட்சியருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தாமதமின்றி அனுமதி வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும். தாமதமாக வரப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட  மாட்டாது.

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் முன்பாகவோ சாலை திருப்பங்கள், சாலை சந்திப்புகளில் அறிவிப்பு செய்யப்பட்ட நினைவுச் சின்னங்கள், சிலைகள் முன், முக்கிய சுற்றுலா தலங்களில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரத் தட்டிகள் மற்றும்  பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி இல்லை. அனுமதி பெற்று வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள், தட்டி  போர்டுகளின் அடியில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி எண் இன்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள், தட்டி போர்டுகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மூலம் உடனே அகற்றப்படும். விதிமுறைகளுக்கு உட்படாமல் இருப்பின் அனுமதி ரத்து செய்யப்படும். அனுமதிபடி வைக்கப்படும்.  பேனர்களை அனுமதி காலம் முடிவடைந்தவுடன் உடனே அகற்ற வேண்டும். மீறி வைப்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணா துரை உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

.