Home செய்திகள் மத்தியில் புதிய அரசு அமைந்ததும் கச்சத்தீவு ஒப்பந்தம் ரத்து: முதல்வர் ஸ்டாலின் உறுதி…

மத்தியில் புதிய அரசு அமைந்ததும் கச்சத்தீவு ஒப்பந்தம் ரத்து: முதல்வர் ஸ்டாலின் உறுதி…

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.18 – இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் கலோனியர் பங்களா மைதானத்தில் மீனவர் நல சந்திப்பு மாநாடு நடந்தது. இதில் கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆட்சிக்காலத்தில் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என வரலாறு தெரியாமல் உளறிக் கொண்டிருக்கின்றனர். 1971-ஆம் ஆண்டு இலங்கை அரசு கச்சத்தீவை சொந்தம் கொண்டாடியதுமே – அன்றைய முதல்வர் கருணாநிதி கச்சத்தீவு நமது அரசுரிமை என்பதற்கான ஆதாரங்களை திரட்ட சட்ட பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமிக்கு உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கு தான் கச்சத்தீவு சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973 டிசம்பரில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அதை மீறி தான் இந்திய – இலங்கை பிரதமர்களால் 1974 ஜூன் 26ல் கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது ஒப்பந்தம் தானே தவிர சட்டம் அல்ல. அப்படி எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. திமுகவும் ஆதரிக்கவில்லை. உடனடியாக, டில்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியை முதல்வர் கருணாநிதி சந்தித்தார். கச்சத்தீவை தரக்கூடாது என வலியுறுத்துனார்.

கச்சத்தீவு நமக்கு சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்தார். அன்றைய சட்ட அமைச்சர் செ.மாதவன், முதல்வருடன் சென்றார். சென்னை திரும்பியதும் இதே ஆதாரங்களை வைத்து மறுபடியும் தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார்.

கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எக் காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள் கூட அப்படித்தான் சொல்கின்றன. 1954ல் இலங்கை என வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என சொல்லப்படவில்லை. கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்கு பகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு தான் இருந்தது என்பதை காட்ட ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எக் காலத்திலும் இலங்கை அரசுக்குக. கப்பம் கட்டியது கிடையாது. கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என் எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும் என்பதற்கான அனைத்து ஆதாரங்களை திரட்டி இந்திய அரசுக்கு கொடுத்ததே கருணாநிதி தான்.

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஸ்வரன் சிங், வெளியுறவுத்துறை செயலர் கேவல் சிங் ஆகியோரை சந்தித்து இந்த ஆதாரங்களை முதல்வர் கருணாநிதி கொடுத்திருக்கிறார்.

‘இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்ததன் மூலம் இந்தியாவுக்கு அல்ல, தமிழ்நாட்டுக்கு தான் முதல் ஆபத்து என முரசொலி மாறன் எம்பி நாடாளுமன்றத்தில் பேசினார்.

திமுக உறுப்பினராக இருந்த இரா.செழியன் நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்ப்பை பதிவு செய்தார். வெளிநடப்பு செய்திருக்கிறார். ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாளே– அதாவது 29.6.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி கூட்டினார்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என் அக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து கட்சிகளும் ஆதரித்த அக் கூட்டத்திலிருந்து அதிமுக மட்டும் வெளிநடப்பு செய்தது.

அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வது அதிமுக. 21.8.1974 அன்று தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து கருணாநிதி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக கண்டன கூட்டங்கள் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. ஜூலை 14-ஆம் தேதி தொடங்கி 45 முக்கிய நகரங்களில் இக் கூட்டங்களை நடத்துவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.

தஞ்சையில் கலைஞர், சென்னையில் அன்பழகன், திருப்பெரும்புதூரில் நான் (மு.க.ஸ்டாலின்) பேசினேன். இந்த வரலாறு எதுவும் தெரியாமல் மாநில அரசான திமுக இந்தியாவோட ஒரு பகுதியை தாரை வார்த்தது என அடிப்படை அறிவு இல்லாமல், குறைந்தபட்ச நேர்மை இல்லாமல், சிலர் பேசி வருவது வெட்கக்கேடானது. கண்டிக்கத்தக்கது.

கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மறுப்பதாகும். எனவே இந்திய அரசு, இலங்கை அரசு உடனான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முயற்சி எடுக்க வேண்டும். ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்க வேண்டும். இம்முயற்சியை  பாஜக அரசு மேற்கொள்ளவில்லை எனில், அடுத்து நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அமைய உள்ள புதிய அரசு இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

கச்சத்தீவை மீட்க தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை காக்கப்படும் மீனவர்களின் நலனை காப்பதாக என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கும்” என பேசினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com