
மதுரை விமான நிலையத்தில் ஒரே விமானத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் வருகை தந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை வரவேற்க வந்த முன்னாள் எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணனுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ராமகிருஷ்ணன் மூக்கு கண்ணாடி உடைந்து கண்ணில் காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் கம்பம் ராமகிருஷ்ணனுடன் சமாதன பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடி மதுரை மாவட்ட திமுக சார்பில் முக ஸ்டாலினுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அதில் வடக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மூர்த்தி எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், முன்னாள் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், பெரிய கருப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.
ஆனால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருந்த நிலையில் குறைந்த அளவு போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திண்டாடினர்.
அதே போல் முதல்வர் மதுரை வருகைக்கு சரக்கு வாகனங்களில் வந்து அதிமுக மகளிரணியினர் முக கவசம், சமூக இடைவெளியின்றி கூடி அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இதனால் விமான நிலையம் செல்ல வந்த பயணிகள் போக்குவரத்து பாதிப்பால் அவதி அடைந்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் தமிழக முதல்வரை வரவேற்க விமான நிலையத்தின் வெளி வாசலில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் சார்பில் வரவேற்பு அளிக்க திருமங்கலத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களில் பெண்கள் மற்றும் தொண்டர்கள் வந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்.
You must be logged in to post a comment.