கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 55 ஆயிரம் குழந்தைகளை கடத்தப்பட்டுள்ளனர். இது 2015-ம் ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2017-18-ம் ஆண்டு குழந்தைகள் கடத்தல் குறித்த அறிக்கையில், கடந்த 2016-ம் ஆண்டில் நாட்டில் 54 ஆயிரத்து 723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் மொத்தம் 40.4 சதவீதம் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுத்தது 22.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. கடந்த 2015-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது, 41 ஆயிரத்து 893 குழந்தைகள் கடத்தப்பட்டு இருந்தனர். கடந்த 2014-ம் ஆண்டில் 37 ஆயிரத்து 854 குழந்தைகள் கடத்தப்பட்டு இருந்தனர். ஆனால், குழந்தைகள் கடத்தல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துத்தான் வருகிறது, குறைந்தபாடில்லை.
இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “குழந்தைகளைக் கடத்துதல் குறித்து சமூகஊடகங்களில் சமீபகாலமாகப் பகிரப்படும் தகவல்கள்தான் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் புள்ளிவிவரங்களும், குழந்தைகள் கடத்தல் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாகக் கிராமப்புறங்களில் காணாமல் போகும் குழந்தைகள் நிலை குறித்து தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களைக் கட்டுப்படுத்தவும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களையும் கட்டுக்குள் கொண்டுவரக்கோரி மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் குழந்தைகள் கடத்தல் தொடர்பான வதந்தியால், 20 பேர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலம் துலேயில் கடந்த 1-ம் தேதி 5 பேர் அடித்து கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 8 ஆயிரத்து 132 ஆட்கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 15 ஆயிரத்து 379 பேர் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 ஆயிரத்து 229பேர் ஆண்கள், 10 ஆயிரத்து 150 பேர் பெண்கள். மீட்கப்பட்ட 23 ஆயிரத்து 117 பேரில், 10 ஆயிரத்து 347 பேர் ஆண்கள், 12 ஆயிரத்து 770 பேர் பெண்கள். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு நிலவரப்படி குழந்தைகளுக்கு எதிராக ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 958 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2015-ம் ஆண்டில் 94 ஆயிரத்து 172 ஆக மட்டுமே இருந்தது. ஏறக்குறைய 13.6 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 24 குழந்தைகளில் ஒரு குழந்தை என்ற வீதத்தில் குற்றம் இழைக்கப்படுகிறது.
You must be logged in to post a comment.