மக்கள் நலனில் அக்கறையில்லா மாநகர பேருந்து நிர்வாகம்.. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கூடும் கட்டணம்..

அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் பௌர்ணமிக்கு பௌர்ணமி உயரும் பஸ் கட்டணம். சாதாரண நாட்களில் அரசு பேருந்துகளில் திருவண்ணாமலையிலிருந்து போளூருக்கு சாதாரணப் பேருந்தில் 22 ரூபாயாகவும், விரைவுப்பேருந்தில் ரூ 30 ஆகவும் கட்டணம் பெறப்படுகிறது.( விரைவுப்பேருந்திற்கு பேப்பரில் Express என்று எழுதி ஒட்டி இருந்தால் மட்டும் போதும்)

பௌர்ணமி தினங்களில் ஓட்டை ஒடிசல் (டெப்போவில் ஓரங்கட்டப்பட்டு இருக்கும் பேருந்துகள்) பேருந்துகள் கூட சிறப்பு பேருந்துகள் என்ற பெயரில் விரைவுப்பேருந்துகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  (சிறப்புக்கட்டணமாக ரூபாய் 30)

இன்றைய பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் இருந்துபோளூருக்கு ரூபாய் 32 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கியது..?

தனியார் பேருந்துகளில் இதே வழித்தடத்திற்கு ரூ 22/- தானே கட்டணம் வசூல் செய்கிறார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாத போக்குவரத்து அதிகாரிகளின் அலட் சியப்போக்குதான் பொதுமக்களின் மீது கட்டண உயர்வு திணிப்பிற்கான காரணமா. மாவட்ட நிர்வாகம்தான் பதில் சொல்ல வேண்டும்.

அதே போல் கொடுமை நடத்தப்படும் மற்றொரு தடம் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்படும் பஸ்களில் தடம். இத்தடத்தில் இருக்கைகள் காலியாக இருந்தால் கூட ரிசர்வேஷன் கட்டணமாக தலைக்கு ரூ.20 கொடுத்து விட்டு தான் ஏற வேண்டும்.

கடந்த பவுர்ணமி அன்று  செங்கல்பட்டு கடந்தவுடன் மழை அதிகமாக பெய்யத்தொடங்கியது தான். ஆனால் சிறிது நேரத்தில் இரண்டு பக்கமும் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தவர்கள் எல்லாம் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டனர். அந்த அளவிற்கு கூரை முழுவதும் ஓட்டை, ஜன்னல் கண்ணாடி ஓரத்தில் எல்லாம் ஆறாக மழை நீர் ஓடியது என்பது தான் வேதனை.

பயணிகளிடம் வசூல் வேட்டை மட்டும் அக்கறை காட்டும் நிர்வாகம் பராமரிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு அதிகாரிகளுக்கு பணி சுமை இருக்கும் போல் தோன்றுகிறது.

ஆதங்கம்:- மூத்த பத்திரிக்கையாளர் சீனு.

தொகுப்பு:- அ.செ.அலாவுதீன், மூத்த நிருபர்.

கீழை நியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்)