Home செய்திகள்மாநில செய்திகள் ஒட்டுமொத்த இந்தியாவிலும், கடந்த 2016 – 2021ஆம் ஆண்டில், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

ஒட்டுமொத்த இந்தியாவிலும், கடந்த 2016 – 2021ஆம் ஆண்டில், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

by Askar

ஒட்டுமொத்த இந்தியாவிலும், கடந்த 2016 – 2021ஆம் ஆண்டில், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சென்னை-ஐஐடி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறைந்திருந்தபோதிலும், 2016 மற்றும் 2021-க்கு இடையில் இந்தியா முழுவதும் பிரசவத்தின் போது சிசேரியன் (சி-பிரிவு) செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐஐடி சென்னை நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

சென்னை ஐஐடியின் மனிதவளம் மற்றும் சமூக அறிவியல் துறையின் பேராசிரியர் வி.ஆர்.முரளீதரன், நாடு முழுவதும் ஏழைகள் அல்லாதவர்கள் சி-பிரிவைத் தேர்வுசெய்ய அதிக வாய்ப்புள்ள போதிலும், தமிழகத்தின் நிலையோ வேறுபட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது தமிழகத்தில் ஏழைப் பெண்கள் அதிகளவில் தனியார் மருத்துவமனைகளில் சி-பிரிவு சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது  என்று அவர் கூறியுள்ளார்.

இவற்றில் சில மருத்துவ ரீதியாகப் பார்த்தால் சிசேரியன் தேவையற்றதாக இருந்தாலும், மேலதிகப் பகுப்பாய்வு மற்றும் சரியான நடைமுறை தேவைப்படுகிறது,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பமடைதல் மற்றும் மகப்பேறு பற்றிய இந்த மதிப்பாய்வு பிஎம்சி மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சிசேரியன் செய்துகொள்ளும் எண்ணிக்கை 17.2 சதவீதத்திலிருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கை 43.1 சதவீதம் (2016) ஆக இருந்து, 49.7 சதவீதம் (2021) ஆக அதிகரித்துள்ளது.

அதாவது தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் 2 மகப்பேறுகளில், ஒன்று சிசேரியன் முறையில்தான் நடக்கிறது என்று ஐஐடி சென்னை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், வரவேற்கத்தக்க வகையில், கர்ப்ப காலத்தில் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் கர்ப்பிணிகளின் விகிதம் 42.2 சதவீதத்திலிருந்து 39.5 சதவீதமாகக் குறைந்துள்ளது, எனவே, சிசேரியன் அறுவைசிகிச்சைகள் அதிகரித்திருப்பது பெரும்பாலும் மருத்துவம் அல்லாத காரணிகளால் தான் அதிகரித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிலர், சுகப்பிரவசத்தில் ஏற்படும் வலி மற்றும் ஆபத்துகளை நினைத்து அச்சத்தில் கர்ப்பிணிகளே சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முனைவது போன்றவையும் இதற்கு ஒரு சில காரணங்களாக இருப்பதாகக் கூறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சிசேரியன் என்பது, மகப்பேறு காலத்தில், உயிராபத்துகளைத் தவிர்க்கவே கொண்டு வரப்பட்ட செயல்முறையாக இருந்தாலும், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில், தேவையற்ற அறுவைசிகிச்சைப் பிரசவங்கள், மருத்துவக் காரணங்கள் இல்லாமல் நடப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவிக்கின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!