Home செய்திகள் இந்த அளவுக்கேனும் வந்திருக்கிறீர்கள், நல்லது. இன்னும் மனசை விரியத் திறந்து வாருங்கள். வீட்டு வாசலில் நிற்காமல் தெருவுக்கு இறங்கி வாருங்கள்.!

இந்த அளவுக்கேனும் வந்திருக்கிறீர்கள், நல்லது. இன்னும் மனசை விரியத் திறந்து வாருங்கள். வீட்டு வாசலில் நிற்காமல் தெருவுக்கு இறங்கி வாருங்கள்.!

by Askar

“இந்த சிஏஏ சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்து உச்ச நீதிமன்றம் சென்று சட்டமாக வந்துவிட்டது. கண்டிப்பாக இந்த சட்டத்தை திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. இவர்கள் என்ன போராட்டம் செய்தாலும் அதனால் எந்த பிரயோசனம் இல்லை என்பது என்னுடைய கருத்து.

சில கட்சிகளில் சில பேர் மதத்தை வைத்து தூண்டுகோலாக அரசியல் செய்கிறார்கள். இது சரியான போக்கு கிடையாது.

சிஏஏ சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக நான் அவர்களுக்காக குரல் கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு போகட்டும்.

நான் வந்து பிஜேபியின் ஊதுகுழல், நான் பிஜேபியின் ஆள், பிஜேபி என் பின்னால் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதிலும், சில பத்திரிகையாளர்கள், சில மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் அவர்கள் சொல்வதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது.”

ரஜினிகாந்த் நேற்று தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் (இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்).

ரஜினி சார், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக வந்துவிட்டது என்கிற வரையில் சரிதான். உச்சநீதிமன்றம் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, சட்டம் செல்லுமா செல்லாதா என்று இன்னமும் தீர்ப்புச் சொல்லவில்லை.

கண்டிப்பாக இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற மாட்டார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்கிறீர்கள். அந்த நம்பிக்கை இல்லாததால் போராட்டத்தால் பிரயோசனம் இல்லை என்கிறீர்களா, அல்லது, சட்டம் சரியானதுதான், அதை எதிர்ப்பது தவறு என்ற உங்களின் கருத்தால் போராட்டம் கூடாது என்கிறீர்களா?

சட்டத்தைத் திரும்பப் பெற மாட்டார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றால், அவர்கள் ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுவார்கள் என்பதை மட்டும் நம்புகிறீர்களா?

மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வது எளிது. மதத்தின் பெயரைக் கூட சொல்ல வேண்டாம், ஆனால் பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களை சிறுபான்மை மதம் சார்ந்த மக்களுக்கு எதிராகத் தூண்டுவது சரியான போக்கு கிடையாது என்றாவது சொல்ல வேண்டாமா?

சிஏஏ சட்டத்தால் பாதிக்கப்பட்டால்தான் முன்னால் வந்து நிற்க வேண்டுமா? சட்டம் செயலுக்கு வருவதற்கு முன்பே பாதிக்கப்பட்டால் பரவாயில்லையா? சிஏஏ சட்டம் பற்றிய அச்சமே ஒரு முக்கியமான பாதிப்புதான் என்று புரியவில்லையா? அந்தக் கவலையோடு போராடுகிறவர்களின் முன்னால் முதல் ஆளாகக்கூட அல்ல, அவர்களுக்கு ஆதரவாகப் பலரும் வரு்கிறார்களே, அவர்களில் ஒருவராகவாவது வந்து நிற்க மனமில்லையா?

பிஜேபி ஆள் என்று சொல்வது வேதனையளிப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். ஏன் அந்த வேதனை? ஆனால், இதில் பிஜேபி சொல்வதையே நீங்களும் சொல்கிறபோது, மக்களின் நல்லிணக்கத்திற்காக வாதாடும் பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களும் களச் செயல்பாட்டாளர்களும் வேதனையடைவது பற்றித் தெரிந்துவைத்திருக்கிறீர்களா?

இந்த அளவுக்கேனும் வந்திருக்கிறீர்கள், நல்லது. இன்னும் மனசை விரியத் திறந்து வாருங்கள். வீட்டு வாசலில் நிற்காமல் தெருவுக்கு இறங்கி வாருங்கள்.

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!