உத்தமபாளையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி, விற்றவர்கள் கைது..

உத்தமபாளையத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கட் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் பேருந்து நிலையம், கோட்டைமுக்கு, தேரடிவீதி, பிடிஆர் காலனி போன்ற முக்கிய வீதிகளில், காவல் சார்பு ஆய்வாளர் முனியம்மா அவர்கள் தலைமையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் நின்றிருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்துள்ளனர், அவர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்களும், ரிசல்ட் பேப்பர்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ரவி என்ற நவரத்தினம், முகமது உசேன், அய்யப்பன் என்பது தெரிய வந்தது, இவர்கள் கேரளா மாநிலம் குமுளியில் மொத்தமாக லாட்டரி சீட்டுகளை வாங்கி உத்தமபாளையம் பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்து வந்துள்ளனர், உடனே இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்று ஏராளமானோர் லாட்டரி விற்பனை செய்து வருவதாகவும், இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் நிறையப் பேர் இருப்பதாகவும், இதனால் ஏழைக் கூலித் தொழிலாளிகள் மட்டுமல்லாது பெரும்பாலான குடும்பங்கள் அழிந்து வருவதாகவும், லாட்டரியை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

செய்தி:- பால்பாண்டி, தேனி