கோடை வெயிலுக்கு பால்கனி கதவு திறப்பு… இரவு நேரத் திருடர்களுக்கும் கொண்டாட்டம்…

தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த வருடக் கோடைவெயில் மிகவும் கடுமையாக கொளுத்தி வருகிறது. இதற்கு கீழக்கரையும் விதி விலக்கல்ல. கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் கொடுமை ஒரு புறம், மின்சார தடை ஒரு புறம். இந்த வெப்பத்தில் இருந்து மக்கள் தற்காத்து கொள்வதற்காக இரவு நேரங்களில் காற்றோட்டத்திற்காக வீடுகளில் உள்ள பால்கனி கதவை திறந்து வைத்து இருக்கிறார்கள்.

ஆனால் இந்த பால்கனி திறப்பே திருடர்களுக்கு திருடவதற்கு ஏதுவாகி விடுகிறது. சில தினங்களுக்கு முன்பு இரவு 02.00 மணியளவில் சின்னக் கடைத்தெருவில் உள்ள வீட்டில் காற்றுக்காக திறந்து வைத்த பால்கனி மூலமாக நுழைந்து திருட முயற்சித்துள்ளார்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் சுதாரித்து சத்தம் போட தொடங்கியவுடன் அடுத்த் வீட்டின் பால்கனி வழியாக நுழைந்து திருடர்கள் வெளியேறியுள்ளார்கள். அதே போல் சமீபத்தில் கீழக்கரை பண்ணாட்டார் தெருவிலுள்ள ஒரு பெண் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு ஓட முயற்சித்துள்ளர்கள், ஆனால் திருடர்கள் கைக்கு செயினின் டாலர் மட்டுமே சிக்கியுள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோடைகாலங்களில் பால்கனி கதவை திறந்து வைக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் உறங்க செல்லும் முன்பு மறந்து விடாமல் பூட்டி வைத்து செல்வது மிகவும் பாதுகாப்பான செயலாகும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் திருடர்களுக்கு நாமே வாய்ப்பை உருவாக்கி கொடுப்பது போல் ஆகிவிடும்.

இரவு நேர திருட்டுக்கு காவல்துறையில் உள்ள பற்றாகுறையும் ஒரு காரணம் என்றே கூறலாம்.  இதனால் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு காவலர்கள் குறைவாகவே உள்ளனர்.  இப்பிரச்சினையை சுட்டிக் காட்டி நம் இணையதளத்தில் கடந்த வருடமே செய்தியும் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

காப்போம் கீழக்கரையை.. உயர்த்துவோம் காவலர்களை…