சிறந்த கலைஞர்களுக்கு இராமநாதபுரத்தில் விருது…

தமிழக அரசு மண்டல கலை, பண்பாட்டுத்துறையின், ஜவஹர்  சிறுவர் மன்றம் சார்பில் மாநில அளவிலான குளிர் கால கலை பயிற்சி நிறைவு நாள் விழா நடைபெற்றது. இதில் 2016- 18-வரை பல்வேறு கலைகளில் தேர்வான 10 கலைஞர்களுக்கு விருது நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடந்தது.

தமிழக அரசு கலை பண்பாட்டு துறை மூலம் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் நோக்கில் இக்கலைகளை சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல தமிழ்நாடு ஜவஹர் சிறுவர்  மன்றம் சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில அளவிலான குளிர்கால கலைப்பயிற்சி முகாம் டிச., 23ல் துவங்கியது. கலை பயிற்சி முகாமில் பாட்டு – ராமநாதபுரம் முனீஸ்வரி, நாட்டுப்புற நடனம் – விருதுநகர் பால்ராஜ், ஓவியம் – தஞ்சை ஈஸ்வரன், கை வினை – அனந்த முத்துமாரி, பரதம் – வேம்பு தியாகராஜன், யோகா- தரணி முருகேசன், சிலம்பம் – தனசேகரன், கராத்தே – களஞ்சியம் பயிற்சி அளித்தனர். 120 சிறார்கள் பங்கேற்றனர்.

நிறைவு நாளையொட்டி சிறுவர், சிறுமியர் கை வண்ணத்தில் உருவாகி பார்வைக்கு வைத்த  ஓவியங்களை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.  பயிற்சி சான்றிதழ்கள், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தலைமை ஓதுவார்மூர்த்தி தேவார இசைக்கலைமணி  ச.முத்தையனுக்கு கலைசுடர்மணி விருது மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் விருது வழங்கி பாராட்டினார். மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் (பொ) சுந்தர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணாதுரை, ராமநாதபுரம் ஆயிர வைசிய  மஹாஜன சபை துணைத்தலைவர் மனோகரன், டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரத்தினசபாபதி, டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளி இணைச்செயலர்  சந்தானம், மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை மீனலோச்சனி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 8 நாள் பயிற்சி முகாமை ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட மேலாளர் எம்.லோக சுப்ரமணியன் ஒருங்கிணைத்தார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்