இராமநாதபுரம் ஆக, 31- இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக ராமநாதபுரம் சுங்கத்துறை உதவி ஆணையருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட தென் கடற்பகுதிகளில் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பண்டலுடன் வந்த வாலிபரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தங்கக்கட்டிகள் இருந்தன. இதனையடுத்து அவரை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், மண்டபத்தில் வசிக்கும் பாம்பனைச் சேர்ந்த சல்மான் கான் எனவும், இலங்கையில் இருந்து கடல் வழியாக களிமண்குண்டு கடற்கரைக்கு கடத்தி வந்த 14.8 கிலோ கடத்தல் தங்கத்தை படகில் இருந்து பெற்று, ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கடைக்கு எடுத்து சென்றது தெரிந்தது. இதன்பின் சுங்கத்துறை உதவி ஆணையரிடம் ஒப்படைத்த 14.8 கிலோ தங்க கட்டிகளை நகை மதிப்பீட்டாளர்கள் மதிப்பீட்டுக்கு பின் திருச்சி எடுத்து சென்றனர்.
இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் களிமண்குண்டு கடற்கரை பகுதியில் நடத்திய சோதனையில் இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வந்த இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்ற ரூ.8.92 கோடி மதிப்பிலான 14.8 கிலோ தங்கம் ஆக.30 ஆம்தேதி பறிமுதல் செய்யப்பட்டு இரு சக்கர வாகனத்தில் தங்கம் கொண்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்,வேதாளை, கீழக்கரை களிமண்குண்டு, உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் பாதுகாப்பையும் மீறி சமீப காலமாக இலங்கையில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுவது ராமநாதபுரம் கடலோர பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.