Home செய்திகள் ஆவின் பால் திருட்டு! அதிகாரிகளை பழி வாங்க திமுக பிரமுகர் போட்ட திட்டமா..?-சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.

ஆவின் பால் திருட்டு! அதிகாரிகளை பழி வாங்க திமுக பிரமுகர் போட்ட திட்டமா..?-சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.

by Askar

ஆவின் பால் திருட்டு! அதிகாரிகளை பழி வாங்க திமுக பிரமுகர் போட்ட திட்டமா..?-சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.

இது சம்பந்தமாக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கீழ்கண்டவாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பால் பண்ணையில் தினசரி சுமார் 83ஆயிரம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களில் சுமார் 31ஆயிரம் லிட்டர் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு 10ஒப்பந்த வாகனங்கள் மூலமும், சுமார் 52ஆயிரம் லிட்டர் 22மொத்த விநியோகஸ்தர் வாகனங்கள் மூலம் பால் முகவர்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காக்களூர் பால் பண்ணையில் இருந்து மாதாந்திர அட்டை மூலம் நுகர்வோருக்கு விநியோகம் செய்ய ஆவின் பால் பாக்கெட்டுகளை ஏற்றிச் செல்லும் ஒப்பந்த வாகனங்களில் தினசரி விநியோக அளவிற்கு அதிகமாக பால் பாக்கெட்டுகள் திருடிச் செல்லப்படுவதாக ஊழல் தடுப்பு விழிப்பு குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை (23.05.2024) இரவு துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியசீலன் அவர்களின் தலைமையிலான குழுவினர் காஞ்சிபுரம் பகுதிக்கு விநியோகத்திற்கு சென்ற மூன்று வாகனங்களை மட்டும் திருவள்ளூர் பகுதியில் மடக்கி சோதனையிட்டதில் மூன்று வாகனங்களிலும் சேர்த்து சுமார் 135டப்புகளில் 1620லிட்டர் ஆவின் நிறைகொழுப்பு பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த பால் திருட்டை தடுக்க தவறியதாகவும் கூறி பால் பண்ணை மேலாளர் கனிஷ்கா, மேற்பார்வையாளர் ராஜா, SFA முரளி உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியளிப்பதோடு, இந்த நடவடிக்கை காக்களூர் பால் பண்ணையில் பணிபுரியும் சில அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதோ..?, இதன் பின்னணியில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு காக்களூர் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் பெற்றுள்ள ஆளுங்கட்சி பிரமுகரான திமுக ஒன்றியச் செயலாளரின் பங்கும் இருக்கிறதோ..? என்கிற பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

ஏனெனில் காக்களூர் பால் பண்ணையில் இருந்து காஞ்சிபுரம் பகுதிக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய செல்லும் மேற்கண்ட மூன்று ஒப்பந்த வாகனங்களும் வியாழக்கிழமை (23.05.2024) இரவு சுமார் 10.00மணியளவில் வெளியேறிய நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த வாகனங்களை காக்களூர் பால் பண்ணை வளாகத்திற்குள்ளேயோ அல்லது பால் பண்ணை நுழைவாயிலுக்கு வெளியிலோ மடக்கி சோதனை செய்யாமல் சம்பந்தப்பட்ட விநியோக வாகனங்கள் பால் பண்ணை வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஒரு மணி நேரம் கழித்து அதுவும் 15நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை ஒரு மணி நேரம் கழித்து கடந்த நிலையில் காக்களூர் பால் பண்ணையில் இருந்து சுமார் 5கிலோமீட்டர் தள்ளியிருக்க கூடிய இடத்தில் வைத்து மடக்கி பிடித்து அந்த விநியோக வாகனங்களை மீண்டும் பால் பண்ணைக்கு கொண்டு வந்து சோதனையிட்டுள்ளதை வைத்து பார்க்கும் போது சம்பந்தப்பட்ட விநியோக வாகன ஓட்டுநர்களின் ஒத்துழைப்போடு வேறு வாகனங்கள் மூலம் இடைப்பட்ட ஓரிடத்திற்கு கொண்டு வரப்பட்ட பால் பாக்கெட்டுகளை அந்த விநியோக வாகனங்களில் ஏற்றி காக்களூர் பால் பண்ணையில் இருந்து திருடி வரப்பட்டது போலவும், பால் பாக்கெட்டுகள் திருட்டு சம்பவத்தை அதிகாரிகள் தடுக்க தவறியது போலவும் சித்தரித்து பால் பண்ணை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தது போல் தெரிகிறது.

காரணம், காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள திமுக ஒன்றியச் செயலாளருக்கும், பால் பண்ணை மேலாளரான ஒரு பெண்மணி உள்ளிட்ட அதிகாரிகளுக்குமிடையே கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நடைபெற்று வந்ததாக தெரிகிறது.

ஏனெனில் திமுக பிரமுகரான அந்த ஒன்றியச் செயலாளரின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த ஏப்ரல் மாதம் பால் பாக்கெட்டுகள் மற்றும் பால் பொருட்களை திருடி ஆவின் நிர்வாகத்திற்கு கடும் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் செய்த பல்வேறு தகிடுதத்தனங்களை பால் பண்ணை அதிகாரிகள் கண்டு பிடித்து அதனை கடுமையாக கண்டித்ததோடு, அதனை ஆவின் நிர்வாகத்திற்கு முறையாக தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பொறுப்பாளரான திமுக ஒன்றியச் செயலாளருக்கு சுமார் 39ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளதாக தெரிகிறது. இதனால் தன்னை 39ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வைத்த காக்களூர் பால் பண்ணை அதிகாரிகள் மீது கடும் கோபம் கொண்ட திமுக ஒன்றியச் செயலாளருக்கு ஈகோ கிளம்ப ஆளுங்கட்சி பிரமுகரான தன் மீதே நடவடிக்கை எடுக்கும் தைரியம் இந்த ஆவின் அதிகாரிகளுக்கு எப்படி.., எங்கிருந்து வந்தது..? என கடும் கோபத்தில் இருந்ததாகவும், அது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தன் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பழிவாங்கியே ஆக வேண்டும் என்கிற ரீதியில் பொங்கியெழுந்ததாகவும் ஆனால் அவர் அமைச்சரிடம் முறையிட்டும் அவரது கோரிக்கை ஏதும் நிறைவேறவில்லை என சொல்லப்படும் நிலையில் காக்களூர் ஆவின் பால் பண்ணை அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கத்துடனேயே தற்போதைய நிகழ்வு கூட்டு சதியாக திட்டமிட்டு அறங்கேற்றப்பட்டுள்ளதாகவே ஆவினில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.

எனவே காக்களூர் பால் பண்ணையில் இருந்து சுமார் 135டப்புகளில் 1620லிட்டர் நிறைகொழுப்பு பால் பாக்கெட்டுகள் திருடிச் செல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பால் பண்ணை வளாகத்திலேயே சம்பந்தப்பட்ட விநியோக வாகனங்களை தடுக்க தவறியது ஏன்..? சம்பந்தப்பட்ட விநியோக வாகனங்கள் பால் பண்ணையில் இருந்து புறப்பட்டு 5கிலோமீட்டர் தூரத்தை கடக்க 15நிமிடங்களே ஆகும் நிலையில் 1மணி நேரமாக எங்கே சென்றது..? அந்த வாகனங்கள் இடைப்பட்ட அந்த 5கிலோமீட்டர் தூரத்தில் எங்கெங்கெல்லாம் நின்று சென்றது…? அந்த விநியோக வாகனங்களின் ஓட்டுநர்களோடு கடந்த சில தினங்களாக தொலைபேசியில் தொடர்பில் இருந்தவர்கள் யார்..? யார்…? அவர்களுக்கும், பால் பண்ணை தொழிலாளர்கள் ஒப்பந்ததாரருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா..? என்பது தொடர்பாக உண்மை நிலவரத்தை கண்டறியும் வகையில் அந்த வாகனங்கள் சென்ற சாலையில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளையும், ஓட்டுநர்களின் தொலைபேசி உரையாடலையும் முழுமையாக ஆய்வு செய்வதோடு, சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திருவள்ளூரில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..? ஒருவேளை இந்த சம்பவத்தில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா..? என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்திட சிபிசிஐடி விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நாசர் அவர்கள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது அம்பத்தூர் பால் பொருட்கள் பண்ணையில் தொழிலாளர்கள் ஒப்பந்தம் பெற்றிருந்தவருக்கு நாசர் அவர்களின் ஆசி இருந்ததால் அதனை பயன்படுத்தி ஆவின் நிர்வாகத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்த அப்போதைய பால் பண்ணை துணைப் பொது மேலாளரை அமைச்சராக இருந்த நாசர் முன்னிலையிலேயே ஒப்பந்ததாரரிடம் பணியாற்றும் மேலாளர் அடிக்கப் போக அதனை நாசர் அவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததால் அந்த அதிகாரி பணியிட மாறுதல் பெற்று வேறு மாவட்ட ஒன்றியத்திற்கு சென்று விட்ட நிகழ்வும், இதை விட ஒடுபடி மேலாக மதுரை ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான உரிமம் பெற்றுள்ள ஆளுங்கட்சியான திமுக பிரமுகரின் நிறுவனம் பணியாளர்களை குறைவாக அனுப்பி விட்டு அதிகமான பணியாளர்கள் பணிக்கு வந்தது போல் கணக்கு காட்டியதை கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்த ஆவின் அதிகாரியை சக அதிகாரிகள் முன்னிலையிலேயே திமுக பிரமுகரின் மேலாளர் எட்டி உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததும் தற்போதைய நிகழ்வுகளோடு நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. எனவே ஆவினில் உள்ள நேர்மையான அதிகாரிகள் சிலரைக் கூட செயல்பட விடாமல் தடுப்பதோடு தங்களின் முறைகேடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கும் அவ்வாறான நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு செயல்பட்டு வரும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீட்டை தடுக்கும் வகையில் ஆவினில் அரசியல் கட்சிகளின் குறிப்பாக ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, நேர்மையான அதிகாரிகளுக்கு இடையூறு அளிக்கும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!