அரசுப் பள்ளி மாணவர்களின் வரலாற்று தேடல் கீழக்கரை அருகே புதிய கற்கோடரி கண்டுபிடிப்பு…

இராமநாதபுரம் மாவட்டம் வேளானூர் அரசு உயர் நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களின் வரலாற்று தேடலில் கீழக்கரை அருகே நத்தத்தில் சங்க கால ஊர் இருந்த தடயம், கற்காலத்தைச் சேர்ந்த புதிய கற்கோடரி கண்டுபிடித்தனர்.வேளானூர் அரசு உயர் நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற எட்டாம் வகுப்பு மாணவர்கள் க.கவியரசன், மு.விஷால், மு.வினித், வே.காளீஸ்வரன், சே.யுவராஜ், த.அருள்தாஸ் ஆகியோர் வரலாற்று தேடலில் ஆர்வம் கொண்டவர்களாவர். இவர்கள் நத்தம் எனும் ஊரில் கற்காலத்தை சேர்ந்த ஒரு புதிய கற்கோடரியை கண்டெடுத்து மன்ற பொறுப்பாசிரியர் சா.செல்வக்குமார், கணித ஆசிரியர் கு.முனியசாமி ஆகியோரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுருவிடம் தகவல் கொடுத்தனர். இது குறித்து வே.ராஜகுரு கூறியதாவது, இம்மாணவர்கள் நத்தம், குளபதம் ஆகிய இரு ஊர்களுக்கு இடையே உள்ள சுப்பாத்தா குள மேற்குக்கரை கானத்திடலில் உள்ள ஒரு தோப்பில் பண்ணைக்குட்டை தோண்டிய இடத்தில் கற்கோடரி கண்டெடுத்தனர்.

அப்பகுதியில் மாணவர்களுடன் மீண்டும் கள மேற்பரப்பாய்வு செய்தபோது, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத் தாது, இரும்புத்துண்டு, அரைப்பு கல், வட்டச்சில்லுகள், மான் கொம்பின் உடைந்த பகுதிகள், மணி செய்யும் கற்கள் ஆகியவற்றை கண்டெடுத்தோம். சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள கானத்திடல் பகுதி முழுவதும் பழமையான பானை ஓடுகள் காணப்படுகின்றன. பெருங்கற்காலம் முதல் கருப்பு சிவப்பு நிற மண்பாண்டங்களை மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.. எனினும் கி.மு.300 முதல் கி.பி.300 வரையிலான சங்க காலத்தில் இது அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் இதை சங்ககால பானை ஓடுகள் என்கின்றனர்.

கி.மு.3000 முதல் கி.மு.1000 வரையிலான காலத்தை சேர்ந்த புதிய கற்கால மனிதர்கள் வழுவழுப்பான கற்கருவிகளை பயன்படுத்தினர். இங்கு கிடைத்த கற்கோடரி புதிய கற்காலத்தை சேர்ந்தது. இதன் நீளம் 5.8 செ.மீ., அகலம் 5.2 செ.மீ., கருங்கல்லாலான இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி உள்ளனர். இதன் அகன்ற வெட்டும் பகுதியின் முனை மழுங்கியுள்ளது. மரத்தாலான தடியில் கட்டி இதை பயன்படுத்துவார்கள். இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. புதிய கற்காலத்தில் பயன்பாட்டில் இருந்த இந்த கற்கோடரியை சங்ககாலத்திலும் தொடர்ந்து பாதுகாத்து வந்திருக்கலாம். கருப்பு , சிவப்பு பானை ஓடுகள் கிடைப்பதன் மூலம் இவ்வூர் சங்ககாலத்தில் மக்கள் குடியிருப்பாக வைகை ஆற்றின் கரையில் அமைந்த ஒரு ஊராக இருந்துள்ளதை அறியமுடிகிறது.

இவ்வூர் அருகே பனையங்கால் என்ற வைகையின் ஒரு கால்வாய் ஓடுகிறது. பனையன் என்பது சங்ககாலப் பாண்டியருடன் தொடர்புடைய பெயராக உள்ளது. இதன் அருகே வைகை என்ற பெயரில் ஒரு ஊரும் உள்ளது. வைகை ஆற்றின் எல்லையைக் குறிக்கும் விதத்தில் வடக்கே தேவிபட்டினம் அருகிலும், தெற்கே கீழக்கரை அருகிலும் வைகை என்ற பெயரில் இரு ஊர்கள் அமைந்துள்ளன. புதிய கற்கால கருவிகள் தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் போகலூரில் சங்ககால வாழ்விடப்பகுதியில் ஒரு கற்கோடரியை 2017இல் கண்டெடுத்தனர்.

இத்தொல்பொருள்கள் பண்ணைக்குட்டை தோண்டிய சிறுபகுதியில் மட்டும் கிடைத்தவை. கானத்திடலின் மற்ற பகுதிகள் மேடாக உள்ளன. எனவே தொல்லியல் துறை இப்பகுதியில் அகழாய்வு செய்து கீழக்கரை பகுதியின் சங்ககாலத் தொடர்பை வெளிக்கொணரவேண்டும். இம்மாணவர்கள் ஏற்கனவே மேலமடை, குளபதம் ஆகிய ஊர்களில் சீன நாட்டுப் பானை ஓடுகள், சேதுபதிகள் கால சூலக்கல் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். வரலாற்றுத் தடயங்களை தேடிக் கண்டுபிடித்த இம்மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் செ.கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்