Home செய்திகள் ஆவின் மூலம் ஹோட்டல் ஸ்பெஷல் வகை பால் விரைவில் அறிமுகம் :ஆவின் தலைவர் என். சின்னத்துரை தகவல்..

ஆவின் மூலம் ஹோட்டல் ஸ்பெஷல் வகை பால் விரைவில் அறிமுகம் :ஆவின் தலைவர் என். சின்னத்துரை தகவல்..

by ஆசிரியர்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களுக்கும் விநியோகம் செய்யும் வகையில், ஆவின் மூலம் ஹோட்டல் ஸ்பெஷல் என்ற புதிய வகை பால் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆவின் தலைவர் என். சின்னத்துரை கூறினார்

தூத்துக்குடி மாவட்ட ஆவின் பால் விற்பனை முகவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடியில் ஆவின் தலைவர் என். சின்னத்துரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆவின் பொது மேலாளர் ஸ்ரீரெங்கநாததுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தின்போது, முகவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளித்து ஆவின் தலைவர் என். சின்னத்துரை பேசியது: திருநெல்வேலி ஆவின் நிறுவனம் தினமும் சராசரியாக 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து தரத்தின் அடிப்படையில் சங்க உறுப்பினர்களுக்கு நல்ல விலை வழங்கி வருகிறது. கொள்முதல் செய்யப்பட்ட பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தினமும் 45 ஆயிரம் லிட்டர் வரை உள்ளூரில் பொதுமக்களின் தேவைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பால் விற்பனை கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு 41 ஆயிரத்து 800 லிட்டர் என இருந்தது. தற்போது நாளொன்றுக்கு 45 ஆயிரம் லிட்டர் வரை விற்பனை செய்யப்படுகிறது. சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், நிறை கொழுப்பு பால் என மூன்று வகைகளில் தற்போது பால் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து ஹோட்டல்களுக்கும் விற்பனை செய்யும் வகையில், ஹோட்டல் ஸ்பெஷல் என்ற புதிய வகை பால் இன்னும் 10 நாள்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அந்த பாலில் 6 சதவீதம் கொழுப்பு சத்தும், இதரசத்து 10 சதவீதமும் இருக்கும்.

தற்போது பாக்கெட்டுகளில் தயிர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கப்புகளில் 10 மில்லி லிட்டர் ரூ. 10-க்கும், 200 மில்லி லிட்டர் ரூ. 15-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏழை பால் உற்பத்தியாளர்களுக்கு 7100 கறவை மாடுகள் நபார்டு திட்டத்தின் மூலம் மானியத்துடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். முகவர்கள் வேண்டுகோளின்படி அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவன குடியிருப்பு பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு ஆவின் பால் அட்டை திட்டம் மூலம் பால் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முகவர்கள் தங்களுக்கு இருக்கும் குறைகளை எந்த நேரத்திலும் ஆவின் தலைவர், பொதுமேலாளர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். முகவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 3 ரூபாய் கமிஷன் என்ற தொகை விரைவில் ஒரு ரூபாய் அதிகரித்து வழங்கப்பட உள்ளது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க சைக்கிள் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்

கூட்டத்தில், ஆவின் மேலாளர்கள் சாந்தி (விற்பனை), சுடலை, திரியோகராஜ், தங்கையா, அனுஷா சிங் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com