Home கல்வி +2 மாணவர்களின் ‘பரபரப்பான’ கடைசி நேர ரிவிஷன் – இன்று தமிழ் முதல் தாள் தேர்வு – தயாராகும் மாணவர்கள்

+2 மாணவர்களின் ‘பரபரப்பான’ கடைசி நேர ரிவிஷன் – இன்று தமிழ் முதல் தாள் தேர்வு – தயாராகும் மாணவர்கள்

by keelai

கீழக்கரை முள்ளுவாடி ஹமீதியா மேல் நிலை பள்ளியில் இன்று 02.03.17 காலை 10 மணிக்கு துவங்கும் தமிழ் முதல் தாள் தேர்வு நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இது கீழக்கரை பகுதியில் இருக்கும் முக்கியமான தேர்வு மையமாகும். தற்போது இந்த பள்ளியின் மாணவர்களும், பல்வேறு பள்ளிகளிலிருந்தும், அருகாமை கிராமங்களில் இருந்தும் தேர்வெழுத நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் தேர்வெழுத பள்ளியில் குழுமியுள்ளனர். அவர்கள் இன்று எழுத இருக்கும் பரபரப்பான கடைசி நேர ரிவிஷனில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

கீழக்கரை காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு, தன் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார். மேலும் தான் படித்ததில் பிடித்த கவிதை வரிகளையும், மாணவ செல்வங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக நம்மிடையே பகிர்ந்துள்ளார்.

பொதுத்தேர்வு எழுதப்போகும் எனதருமைக் குழந்தைகளே!

எழுதுவது விஷப்பரீட்சை அல்ல விஷயம் நிறைந்த பரீட்சை.

தேர்வு வாழ்க்கை அல்ல அச்சப்பட…

எளிதாக எதிர்கொள் எந்த உயரத்தையும் எட்டலாம்.

இதுவரை அப்பாவின் ஆறுதல் அம்மாவின் தேறுதல் ஆசிரியரின் தேடல்கள் உன்னை பட்டை தீட்டியிருக்கும்.

படி…படி…படி… படித்துவிட்டாயா? எழுதிவிட்டாயா? மதிப்பெண் எவ்வளவு? மருத்துவமா? பொறியியலா?

என்ற கேள்விக்கனைகள்தான் உன் காதுகளை வேட்டையாடிருக்கும்.

மறந்து விடு எல்லாம் மறந்து விடு.

தேர்வு உன்னுடையது.

தைரியத்தை உனக்குள் வை.

தேர்வு நாளில் எழு அதிகாலை யில் எழு.

உன்னைத் தூய்மையாக்கு. உள்ளத்தைத் தூய்மையாக்கு.

படித்ததை மூளையில் முடிந்து வை.

எதை எழுதுவது? எப்படி எழுதுவது? எனத் திட்டமிடு. அதற்காக சிந்தனை யை வட்டமிடு.

மதிப்பெண்ணை மட்டும் யோசித்தி விடாதே. அது உன்னைக் கோழையாக்கும் கைவிலங்கிடும் மனதை மலடாக்கும்.

உழைப்பிற்கும் உன்னதமான முயற்சிக்கும் உரிய மதிப்பெண் கிடைத்தே தீரும்

தேவையானால் சாப்பிடு தேவையானவற்றை சாப்பிடு.

உணவுகள் கூட உணர்வுகளைச் சிதைக்கும்.

துணியை உடுக்கும் போதே துணிவை உடுத்திக்கொள்.

தேர்வு சதா ரணம் அல்ல சாதாரணம்.

தந்தையிடம் தைரியத்தை க் கடன் வாங்கு.

தாயிடம் நிதானத்தைப் பெற்றுக்கொள்.

கற்றுக்கொடுத்தவனிடம் காற்றை வாங்கிக்கொள்.

தேர்வறைக்குள் தெளிந்த நீரோடையாய் செல்.

ஒரு நொடி கண்களை மூடிக் கொள்.

மிச்சமுள்ள அச்சத்தை எச்சமென தூக்கி எறி..

எல்லாம் தெரியும் என்று நம்பி கையால் எழுது. உன் நம்பிக்கையால் எழுது.

எழுது.. தெளிவாக எழுது… எழுது.. எளிதாக எழுது…

வினா அருகில் விடையோ உன்னுள் உருண்டோடி விளையாடி வருகின்றன

எழுது தடுமாறாமல் எழுது. தடம் மாறாமல் எழுது.

எழுதியபின் எழுந்து வா வாழ்க்கையிலும்…

முன்னேற முன்பதிவு செய்தோம் என்று. .. முகம் மலர வா…

உன்னை அழைத்துச் செல்ல வெற்றி வெகு நேரம் காத்துக்கிடக்கும்.

மேலும் கீழக்கரை காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தேர்வுக்கு தயாராகும் மாணவ மணிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களையும் பட்டியலிலிட்டு நம்மிடையே பகிர்ந்திருக்கிறார்.

♦ தேர்வுக்கு செல்லும் முன்னர் கட்டாயமாக காலை உணவு அவசியம்.

♦ இரவுத் தூக்கம் மிக அவசியம். ஆறு மணி நேரம் வரை துாங்குவது புத்துணர்ச்சி அளிக்கும். உடல் இயக்கம் சுறுசுறுப்பாக இருக்க வழிவகுக்கும்.மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

♦ நீங்கள் இதுவரை பயன்படுத்திய பேனா பென்சில்களையே தேர்வு எழுதுவதற்கும் பயன்படுத்துங்கள். புதிய பேனாக்கள் தேவையில்லை. தேர்வு எழுதியவுடன் நீங்கள் எழுதியது சரிதானா..? என்பதை இறுதியில் மறுபடியும் படித்துப்பாருங்கள்.

♦ முதலில் கேள்வித்தாளை ஒன்றுக்கு இருமுறை படித்துப் பாருங்கள். தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். சற்று யோசனை செய்துதான் விடை எழுத முடியும் என்றால் விடைதாள்களில் அதற்கான இடத்தை விட்டு விட்டு அடுத்த கேள்விக்கு விரைவாக செல்லுங்கள்.

♦ தேர்வு துவங்கும், அரை மணி நேரத்திற்கு முன், புத்தகம் படிப்பதை நிறுத்திகொள்ள வேண்டும்

♦ பயம், பதற்றம், நடுக்கம் இவை தேவையில்லை. தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதினால், நிச்சயம் நல்ல மதிப்பெண் பெற முடியும்.

வாழ்த்துக்கள் மாணவ செல்வங்களே.. சரித்திரம் படைக்க புறப்படுங்கள்…

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com